திருமணத்திற்காக படிப்பை கைவிடுமாறு வற்புறுத்தியதால் 19 வயது சிறுமி தற்கொலை

உத்தரப்பிரதேசத்தில் திருமணத்திற்காக படிப்பை கைவிடுமாறு குடும்பத்தினர் வற்புறுத்தியதால் 19 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-02 14:48 GMT

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் திருமணத்திற்காக படிப்பை கைவிடுமாறு குடும்பத்தினர் வற்புறுத்தியதால் 19 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் எட்டாவாவில் காசிராம் காலனியைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது 19). பிரியங்காவுக்கு உடன் பிறந்தவர்கள் 2 சகோதரர்கள், 4 சகோதரிகள். பிரியங்காவின் தந்தை கூலி வேலை செய்து வருகிறார். பிரியங்கா இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பில் சேர இருந்தார். இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து பிரியங்கா தனது குடும்பத்தினரிடம் படிப்பை முடிக்க வேண்டுமென்றும் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லையென்றும் பலமுறை கூறியுள்ளார். ஆனாலும் அதையெல்லாம் கேட்காத அவரது குடும்பத்தினர் பிரியங்காவுக்கு திருமணம் நிச்சயம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து கல்வி கற்க வேண்டும் என்ற தனது கனவுக்கும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற குடும்பத்தினரின் தொடர் வற்புறுத்தலுக்கும் இடையே மனமுடைந்த பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரியங்காவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்