உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தல்: 813 மாநகராட்சி வார்டுகளில் பா.ஜனதா வெற்றி..!!

உத்தரபிரதேசத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 813 மாநகராட்சி வார்டுகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது. 17 மேயர், 89 நகராட்சி தலைவர் பதவிகளையும் கைப்பற்றியது.

Update: 2023-05-14 23:50 GMT

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 75 மாவட்டங்களில் உள்ள 760 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 14 ஆயிரத்து 522 பதவிகளுக்கு கடந்த 4 மற்றும் 11-ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. நேற்று முன்தினம் ஓட்டு எண்ணிக்கை நடந்தது.

மொத்தம் உள்ள வாரணாசி, லக்னோ, அயோத்தி, ஜான்சி, பரேலி, மதுரா-பிருந்தாவன், மொரதாபாத், சகாரன்பூர், பிரயாக்ராஜ், அலிகார், ஷாஜகான்பூர், காசியாபாத், ஆக்ரா, கான்பூர், கோரக்பூர், பெரோசாபாத், மீரட் ஆகிய 17 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றது.

813 மாநகராட்சி வார்டுகள்

நேற்று தேர்தல் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள்ள 1,420 மாநகராட்சி வார்டுகளில் 813 வார்டுகளை (கவுன்சிலர் பதவி) பா.ஜனதா கைப்பற்றியது.

அடுத்தபடியாக, சமாஜ்வாடி கட்சி 191 வார்டுகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 85 வார்டுகளையும், காங்கிரஸ் கட்சி 77 வார்டுகளையும், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 19 வார்டுகளையும், ஆம் ஆத்மி 8 வார்டுகளையும் கைப்பற்றின. இதர இடங்களில் சிறிய கட்சிகள் வெற்றி பெற்றன

நகராட்சி

199 நகராட்சிகளின் தலைவர் பதவிகளில் பா.ஜனதா 89 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேச்சைகள் 41 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 35 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 16 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், ஆம் ஆத்மி 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.

மொத்தம் உள்ள 5 ஆயிரத்து 327 நகராட்சி வார்டுகளில் சுயேச்சைகள் 3 ஆயிரத்து 130 வார்டுகளை கைப்பற்றினர். பா.ஜனதா, 1.360 வார்டுகளை மட்டும் கைப்பற்றி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

சமாஜ்வாடி 425 வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 191 வார்டுகளிலும், காங்கிரஸ் 91 வார்டுகளிலும், ஆம் ஆத்மி 30 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.

பேரூராட்சி

மொத்தம் உள்ள 544 பேரூராட்சி தலைவர் பதவிகளில், பா.ஜனதா 191 இடங்களை கைப்பற்றியது. சுயேச்சைகள் 195 இடங்களையும், சமாஜ்வாடி 78 இடங்களையும், பகுஜன் சமாஜ் 37 இடங்களையும், காங்கிரஸ் 14 இடங்களையும் கைப்பற்றின.

மொத்தம் உள்ள 7 ஆயிரத்து 177 பேரூராட்சி வார்டுகளில், சுயேச்சைகள் 4 ஆயிரத்து 824 வார்டுகளில் வெற்றி பெற்றனர். பா.ஜனதா, 1,403 வார்டுகளிலும், சமாஜ்வாடி 485 வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 215 வார்டுகளிலும், காங்கிரஸ் 77 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்