சமூக ஊடகங்கள் மூலம் வேலை வாய்ப்பு மோசடி! மியான்மர் நாட்டில் சிக்கிய இந்தியர்கள்: வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!
மியான்மர் நாட்டில் 300 இந்தியர்கள் இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக வந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதுடெல்லி,
மியான்மர் நாட்டில் 60 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக வந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது குறித்து வெளியுறவு அமைச்சகம் சில எச்சரிக்கை அறிவுறுத்தல்களை மக்களுக்காக வெளியிட்டுள்ளது.
இந்திய இளைஞர்களை குறிவைத்து சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் போலி வேலை மோசடிகள் நடைபெறுகிறது. குறிப்பாக துபாய் மற்றும் இந்தியா சார்ந்த முகவர்கள் மூலம் தாய்லாந்தில் டேடா எண்ட்ரி வேலைகள் அறிவிக்கப்படுகின்றன.
தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைக்காக தாய்லாந்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதன்பின்பு ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.
சட்டவிரோத வேலைகளை அவர்கள் செய்ய மறுத்தால் வேலை அளிப்போரால் மின்சாரம் பாய்ச்சி கடுமையாக தண்டிக்கப்படுவதாகவும், பிணைக்கைதிகளாக அவர்கள் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்த தகவல் வெளியுறவு அமைச்சகத்துக்கு கிடைத்துள்ளது.
இந்திய குடிமக்கள் வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு முன், வேலை தருவதாக கூறியுள்ள வெளிநாட்டு முதலாளிகள் மற்றும் ஆட்சேர்ப்பு முகவர்களின் நற்சான்றிதழ்கள் மற்றும் முன்னோடிகளை கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.
ஆகவே இது போன்ற போலி வேலை வாய்ப்புகளில் இந்திய குடிமக்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தென்கிழக்கு மியான்மரின் கயின் மாநிலத்தில் உள்ள மியாவாடி பகுதி தாய்லாந்தின் எல்லையாக உள்ளது. மியாவாடி பகுதி முழுமையாக மியான்மர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை மற்றும் சில இன ஆயுதக் குழுக்கள் அதன் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.
இந்நிலையில், மியான்மரில் உள்ள இந்திய தூதரகம் சமீபத்தில் சுமார் 60 பேரில் 30 இந்தியர்களை மீட்டது. அவர்களில் பலர் மியாவாடி பகுதியில் அடைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.