டி.ஜே.ஹள்ளி கலவர வழக்குகளை திடீரென வாபஸ் பெற முடியாது; போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பேட்டி

டி.ஜே.ஹள்ளி கலவர வழக்குகளை திடீரென வாபஸ் பெற முடியாது என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

Update: 2023-07-27 21:13 GMT

பெங்களூரு:

டி.ஜே.ஹள்ளி கலவர வழக்குகளை திடீரென வாபஸ் பெற முடியாது என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மந்திரிசபை துணை குழு

உடுப்பி கல்லூரி கழிவறை வீடியோ விவகாரத்தில் தவறு செய்த மாணவிகள் மீது அந்த கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் பல்கலைக்கழகம் குழு ஒன்றை அமைத்துள்ளது. அதன் உண்மை தன்மை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நானும் போலீசாருக்கு தகுந்த உத்தரவை பிறப்பித்துள்ளேன். இது கல்லூரி விஷயம் என்பதால் நான் இதை சிறிய சம்பவம் என்று கூறினேன். இது விளையாட்டு தனமான சம்பவம் என்று கூறவில்லை.

இதற்கு வேறு ரீதியில் அர்த்தம் கற்பிப்பது சரியல்ல. டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி கலவர வழக்கில் அப்பாவிகளை விடுவிக்குமாறு எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டுள்ளார். வழக்குகளை திடீரென வாபஸ் பெற முடியாது. மந்திரிசபை துணை குழு அமைக்க வேண்டும். அந்த குழு ஆய்வு செய்து அது சரி தான் என்று அறிக்கை வழங்க வேண்டும். அதன் பிறகு வழக்குகளை கைவிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

அரசியல் செய்கிறார்கள்

நாங்கள் முன்பும் வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளோம். பசவராஜ் பொம்மை, அரக ஞானேந்திரா ஆகியோர் போலீஸ் மந்திரியாக இருந்தவர்கள். வழக்குகளை வாபஸ் பெற என்ன மாதிரியான நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது அவர்களுக்கு தெரியும். ஆனாலும் இதில் அவர்கள் அரசியல் செய்கிறார்கள். கர்நாடக மக்கள் அறிவாளிகள். அதனால் தான் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். உடுப்பி விவகாரத்தை மணிப்பூர் விவகாரத்துடன் ஒப்பிட்டு பேசும் பா.ஜனதாவினரின் செயலை என்னவென்று சொல்வது?.

மணிப்பூரில் 2 பெண்கள் ஆடை இன்றி கொடூரமான முறையில் நடத்தப்பட்டனர். அங்கு தேசிய மகளிர் ஆணையம் செல்லவில்லை. மணிப்பூர் சம்பவத்தை என்னவென்று அழைப்பது என எனக்கு தெரியவில்லை. உடுப்பி கழிவறை வீடியோ விவகாரத்தில் மகளிர் ஆணையம் இங்கு வந்துள்ளது. இது அந்த அளவுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவமா?. அவர்கள் இங்கு வரட்டும். இங்கு வர வேண்டாம், எதற்காக இங்கு வருகிறீர்கள் என்று நான் கேட்க மாட்டேன். அதை நான் சொல்லவும் மாட்டேன். ஆனால் இங்கு என்ன கண்டுபிடிக்கப்பட்டது என்று அனைத்தையும் அந்த ஆணையத்தினர் கூற வேண்டும். இந்த சம்பவத்திற்கு ஏதாவது வீடியோ அல்லது வேறு ஏதாவது ஆதாரம் உள்ளதா?.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்