50 சதவீதம் தள்ளுபடி சலுகை காலம் நீட்டிக்கப்படுமா?

பூங்கா நகரம், சிலிக்கான் பள்ளத்தாக்கு, உலகின் தொழில்நுட்ப தலைநகரம் என பெங்களூருவுக்கு பல்வேறு புனைப்பெயர்கள் உண்டு.

Update: 2023-02-08 20:41 GMT

பெங்களூரு:-

1.30 கோடி மக்கள்

பெங்களூருவில் ஆயிரக்கணக்கான கணினி நிறுவனங்களும், அதை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் உள்ளன. மக்கள் தொகையும் 1.30 கோடிக்கும் அதிகமாக உள்ளது. அதற்கு ஏற்றார்போல் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பெங்களூரு நகரில் மட்டும் லட்சக்கணக்கான வாகனங்கள் ஓடுகின்றன.

இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆங்காங்கே சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் பலர் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் மீறிவிடுகின்றனர். அவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை சில நேரங்களில் போக்குவரத்து போலீசார் நேரடியாக பிடித்து விடுகிறார்கள். மேலும் சிக்னல்களில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாகவும் கண்காணித்து போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கிறார்கள்.

போக்குவரத்து விதிகள்

இவ்வாறு பெங்களூருவில் மட்டும் தினமும் போக்குவரத்து விதிகளை மீறியதாக லட்சக்கணக்கான வழக்குகள் குவிகின்றன. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் இருந்து போலீசார் உடனடியாக அபராதம் வசூலிக்கிறார்கள். சில நேரங்களில் அவர்களுக்கு அபராதம் விதித்துவிட்டு பணத்தை வசூலிக்காமல் விட்டுவிடுகிறார்கள். இதுபோல் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வீடுகளுக்கு போலீசார் அபராத கடிதத்தை அனுப்பி வைக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் அபராதத்தை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். இதனால் போக்குவரத்து போலீசார் கோடிக்கணக்கில் அபராத தொகையை வசூலிக்க வேண்டியது இருந்தது.

போலீசார் அதிரடி அறிவிப்பு

இதையடுத்து போக்குவரத்து போலீசார், அரசிடம் ஆலோசித்து ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்தனர். அது என்னவென்றால் போக்குவரத்து அபராத தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி செய்வதாகும். இந்த அபராத தொகையை வருகிற 11-ந் தேதிக்குள் செலுத்தினால் 50 சதவீதம் தள்ளுபடி சலுகையை பெறலாம் என்று போக்குவரத்து போலீசார் அதிரடி அறிவிப்பை வெளியிட்டனர். இந்த திட்டம் அமலுக்கு வந்து நேற்றுடன் 5 நாட்கள் ஆகிறது. இந்த 5 நாளில் சுமார் ரூ.50 கோடி வரை அபராத தொகை வசூலாகி இருப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது கடந்த 3-ந் தேதி இந்த திட்டம் அமலுக்கு வந்தது. அன்றைய தினம் மட்டும் ரூ.7 கோடி 41 ஆயிரம் அபராதம் வசூலானதாக கூறப்படுகிறது.

சலுகை காலத்தை நீட்டிக்க...

கடந்த 4-ந் தேதி ரூ.9 கோடியே 27 ஆயிரம், 5-ந் தேதி ரூ.7 கோடியே 50 லட்சம், 6-ந் தேதி ரூ.9 கோடியே 57 லட்சம், 7-ந் தேதி ரூ.8 கோடியே 13 லட்சம் மற்றும் நேற்று(8-ந் தேதி) ரூ.3 கோடியே 10 லட்சம் வசூலாகி இருப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த அபராத தொகை நேரடியாகவும், ஆன்லைன் மூலமும், பெங்களூரு ஒன் மையம் மூலமும் வசூலாகி இருப்பதாக போலீசார் கூறினர். இதற்கிடையே இந்த சலுகை காலத்தை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி இந்த சலுகை காலம் மேலும் நீட்டிக்கப்படுமா? என்பது தெரியவில்லை. அதுபற்றி போலீசார் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இந்த சலுகை காலத்தை நீட்டித்தால் அபராத தொகையை குறைந்தது 60 முதல் 80 சதவீதம் வரையில் வசூலித்து விடலாம் என்று போலீசார் கணக்கு போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்