வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு ராணுவ அதிகாரியாகும் என்ஜினீயரிங் மாணவர்

வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு தேர்வில் வெற்றிபெற்று ராணுவ அதிகாரியாக தேர்வான என்ஜினீயரிங் மாணவருக்கு பாராட்டுகள் குவிகிறது.

Update: 2022-06-13 20:52 GMT

மங்களூரு

வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு தேர்வில் வெற்றிபெற்று ராணுவ அதிகாரியாக தேர்வான என்ஜினீயரிங் மாணவருக்கு பாராட்டுகள் குவிகிறது.

குடும்ப சூழ்நிலை

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பெல்தங்கடி தாலுகாவை சேர்ந்தவர் கணபதி பட் குலமர்வா. இவரது மனைவி வசந்தி. இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் ஒரு மகன் சத்விகா குலமர்வா. என்ஜினீயரிங் படித்த அவா் சிறு வயது முதலே இந்திய ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்று முயற்சி செய்து வந்தார். ஆனால், கல்விக்கடனை திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தால், அவர் தனது கனவை கைவிட்டுவிட்டு அமெரிக்காவுக்கு வேலைக்காக சென்றார். அமெரிக்காவுக்கு சென்ற அவர், 2½ ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு திரும்பினார். இதையடுத்து அவர் தனது ராணுவ இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கினார். சத்விகாவின் விடாமுயற்சியால் இந்திய ராணுவத்தின் உயர்ந்த பதவியான லெப்டினன்ட் அதிகாரியாக பணியில் சேர உள்ளார்.

இதுகுறித்து சத்விகா குலமர்வா கூறியதாவது:-

கடின முயற்சி

சிறுவயது முதலே ராணுவத்தில் சேர வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் எனது குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த இலக்கு தடைப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் பணி செய்தபோதும் எனது குறி ராணுவத்தில் சேருவதாகவே இருந்தது. அங்கு எனது உடல் பயிற்சிகளை தீவிரமாக மேற்கொண்டேன். பின்னர் எனது வேலையை உதறி விட்டு சொந்த ஊரான பெல்தங்கடிக்கு வந்து ராணுவ தேர்வுக்கு தயார் ஆனேன். எனது கடின முயற்சியால் தற்போது ராணுவத்தில் பணிபுரிய எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜபால்பூரில் நடைபெற்று வரும் 2 வார ராணுவ பயிற்சிக்கு பின் இந்திய ராணுவத்தில் எனது பங்களிப்பு இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராணுவத்தில் சேர உள்ள தனது மகன் குறித்து கணபதிபட் குலமர்வா கூறுகையில், எனக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். எனது மகன் சத்விகா அமெரிக்காவுக்கு சென்றபோது, நான் எனது ஒரு மகனை இழந்ததாக உணர்ந்தேன். ஆனால் எனது மகன் படிப்பை முடித்துவிட்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்