புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சான்றிதழ்கள் விற்பனை 51 சதவீதம் சரிவடைந்தது

மார்ச் மாதத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சான்றிதழ்கள் விற்பனை 51 சதவீதம் சரிவடைந்தது;

Update:2019-04-01 12:43 IST
புதுடெல்லி

மார்ச் மாதத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சான்றிதழ்கள் விற்பனை 51 சதவீதம் சரிவடைந்து 11.78 லட்சமாக குறைந்துள்ளது.

ஏலமுறை விற்பனை

மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்சு மற்றும் பவர் எக்ஸ்சேஞ்சு ஆப் இந்தியா ஆகிய இரண்டு மின் சந்தைகள் ஒவ்வொரு மாதமும் இறுதி புதன்கிழமை அன்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சான்றிதழ்களை ஏலமுறையில் விற்பனை செய்கின்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் பொறுப்பு விதியை பூர்த்தி செய்யும் வகையில் மின் விநியோக நிறுவனங்கள் உள்பட சில குறிப்பிட்ட நுகர்வோர்கள் இந்த சான்றிதழ்களை வாங்க வேண்டும்.

மார்ச் மாதத்தில் 11.78 லட்சம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சான்றிதழ்கள் விற்பனை ஆகி உள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 24.26 லட்சமாக இருந்தது. ஆக, விற்பனை 51 சதவீதம் குறைந்து இருக்கிறது.

இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்சில் (ஐ.இ.எக்ஸ்) கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி (புதன்கிழமை) நடைபெற்ற ஏலத்தில் 9.34 லட்சம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சான்றிதழ்கள் விற்பனை ஆகி உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 20.79 லட்சமாக இருந்தது. இதே போன்று பவர் எக்ஸ்சேஞ்சு ஆப் இந்தியாவில் (பி.எக்ஸ்.ஐ.எல்) இச்சான்றிதழ்கள் விற்பனை (3.47 லட்சத்தில் இருந்து) 2.44 லட்சமாக குறைந்து இருக்கிறது. ஆக மொத்தம் 11.78 லட்சம் சான்றிதழ்கள் விற்பனை ஆகி உள்ளது.

2022-ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசத்தி துறையின் உற்பத்தி திறனை 1,75,000 மெகா வாட்டாக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 2018-19-ஆம் நிதி ஆண்டில் இத்துறையின் உற்பத்தி திறன் 9,000 மெகா வாட் உயரும் என்றும், 2019-20-ல் 10,000 மெகா வாட் அதிகரிக்கும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இயற்கை வளங்கள்

மின் உற்பத்தி துறையை பொறுத்தவரை நிலக்கரியை எரிக்காமல், புகை கக்காமல், சாம்பலை குவிக்காமல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதே பசுமை. பாரம்பரிய முறைகளை தவிர்த்து சூரியசக்தி, காற்று, நீர் போன்ற இயற்கை வளங்கள் வாயிலாக பெறும் மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எனப்படுகிறது.

மேலும் செய்திகள்