சாமானியன் உருவாக்கிய சரித்திரம்...!

இன்று (மே 5-ந்தேதி) மாவீரன் நெப்போலியன் நினைவு நாள்;

Update:2019-05-05 14:01 IST
ஐரோப்பா கண்டத்தில் பிரான்சு நாட்டின் கட்டுப்பாட்டில் கோர்சிகா என்ற தீவு இருந்தது. அந்த தீவில் உள்ள அஜாசியோ என்ற கிராமத்தில் பிறந்த ஒரு மாணவர் திறமை மிக்கவராக இருந்தார். ஆனால் கல்வி கற்க அவரிடம் பணம் இல்லை. அதற்கு அவரின் ஏழ்மையே காரணம். இதனை அறிந்த பிரான்சு அரசு அவரது கல்விச்செலவை ஏற்றது.

அதனால், பணக்கார மாணவர்களோடு அந்த ஏழை மாணவனும் கல்வி கற்றார். ஆனால், அங்கு ஏழ்மையை காரணம் காட்டி அந்த மாணவரை அனைவரும் கேலி செய்தனர். இதனால் அவருக்கு நண்பர்களென யாருமில்லை. இச்செய்தி அவரது பெற்றோர்களின் காதுகளில் எட்டியது. மனவருத்தம் ஒருபுறம் இருந்தாலும், தன் மகன் ஏழ்மையை ஒரு பொருட்டாக்க மாட்டான் என்ற திடநம்பிக்கை அவர்களுக்குள்ளே இருந்தது.

இந்நிலையில், ஒருநாள் அந்த மாணவர் தனது தாய்க்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் தனக்கு பல புத்தக நண்பர்கள் இருப்பதாகவும், அதில் ரூசோவின் புத்தகங்களே தனக்கு சிறந்த நண்பர்கள் எனவும் எழுதியிருந்தார்.

புத்தகங்கள் வாழ்வை சிறப்பாக்கும். புத்தகத்தை நண்பனாக்கி ஐரோப்பாவை தன் கையில் அடக்கி, இன்று உலகம் முழுவதும் தன் சரித்திரத்தை படிக்க வைத்த அந்த ஏழை மாணவன் தான் மாவீரன் நெப்போலியன். சார்லஸ் மேரி போனபார்டுக்கும், விடிஜியா ரெமோலினியோவிற்கும் மகனாக 1769-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி நெப்போலியன் பிறந்தார்.

கல்வியில் சிறந்து விளங்கிய அவர், தனது 16-வது வயதில் பட்டம் பெற்றார். அப்போது அவர் குள்ளமான உருவம் கொண்டவராய் இருந்தார். ஆனால் நினைப்பதை அடையும் துணிவு அதிகமாக இருந்தது. அத்திறமையினால் பிரான்சின் படைப்பிரிவில் சாதாரண வீரனாக சேர்ந்தவர் பின்னாளில் பிரான்சின் படைகளுக்கு படைத் தளபதி ஆனார். ராணுவ நுட்பங்கள் அவரது செயலில் வெளிப்படலாயின. அதனை நிரூபிக்கும் பொருட்டு இத்தாலி வழியாக ஆஸ்திரியாவை தாக்க நெப்போலியன் தலைமையில் படையெடுத்து செல்ல, பிரான்சு நாடு உத்தரவு வழங்கியது. படை தயாரானது. மிக உயர்ந்த ஆல்ப்ஸ் மலையை கடக்க வேண்டும். பாரிசில் இருந்து அதிக தூரம் பயணித்ததால், வீரர்களிடையே ஆற்றல் குறைந்தது. ஆல்ப்ஸ் மலையை கடக்க மலைத்தனர் வீரர்கள்.

வார்த்தைகளால் வசப்படுத்தும் ஆற்றல் கொண்ட நெப்போலியன் வீரர்களிடையே பேசினார்.

“மனம் இருந்தால் மார்க்கம் உண்டு” என்பதை நெஞ்சில் ஏற்று சுலபமாக ஆல்ப்ஸ் மலையை கடந்தனர் வீரர்கள். வெற்றிகள் பல குவித்தனர். நெப்போலியன் பெயர் பிரான்சு நாடு முழுவதும் பரவியது. பிரான்சு மக்கள் சர்வாதிகார மன்னனை பிரெஞ்சு புரட்சியின் மூலம் தூக்கி எறிந்த காலகட்டம் அது. நாட்டை வழிநடத்த சட்டங்கள் இல்லை. ஒழுங்கு முறைகளும் இல்லை.

அப்போது பிரான்சை வழிநடத்திய டேரக்டரி அரசு நெப்போலியனின் வளர்ச்சியையும், புகழையும் கண்டு பயம் கொண்டது. அதனால் நெப்போலியனை பிரான்சு நாட்டு மக்களிடமிருந்து தள்ளிவைக்கவும் மீண்டும் நெப்போலியன் பிரான்சுக்கு வராமல் தடுக்கவும் டேரக்டரி அரசு ஒரு திட்டத்தைத் தீட்டி, தூரத்து நாடான எகிப்திற்கு எதிராக போர்புரிய 1798-ம் ஆண்டு அனுப்பியது.

நெப்போலியனின் படைகள் எகிப்திய படைகளை வென்றனர். எகிப்தை ஆட்சி செய்ய ஆரம்பித்தபோது, நெப்போலியனின் வார்த்தைகளை மக்கள் கேட்க மறுத்தனர். காரணம் புரிந்தால் அனைத்தும் எளிமையாகிவிடும் என்பதில் நம்பிக்கை கொண்டவர் நெப்போலியன். ஆதலால், மக்களின் மனநிலையை அறிய படைவீரர்களை அனுப்பினார். மதமே இன்னலுக்கு காரணம் என்பதை வீரர்கள் மூலம் அறிந்தார்.

மதம் எப்போதும் மனிதனை ஆட்சி செய்யக்கூடாது. மதம் ஒருவரின் நம்பிக்கை; நம்பியவர்களின் வழிகாட்டி. இதனை உணர்ந்ததால் “தான் எகிப்தில் முகமதியர்” என்ற அறிக்கையை வெளியிட்டு மக்களின் உள்ளத்தில் புகுந்தார் நெப்போலியன். மக்களின் எண்ணங்களை புரிந்து நடந்தால், நினைப்பதை அடையலாம் என்பதை வரலாற்றில் நிரூபித்து காட்டினார்.

இந்நிலையில் பிரான்சின் மக்கள் டேரக்டரி அரசின் ஆட்சியில் நிம்மதி அடையவில்லை. மக்கள் நெப்போலியனை எதிர்பார்த்து காத்திருந்தனர். எகிப்திலிருந்து படையுடன் திரும்பி வந்த நெப்போலியன், டேரக்டரியை நீக்கிவிட்டு 1799-ம் ஆண்டு கன்சுலேட் அரசை தொடங்கினார். பிரான்சின் முதல் கன்சுலேட் ஆனார் மக்களை மதித்து நிர்வாகம், பொருளாதாரம், கல்வி, போன்றவற்றில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன.

அயல்நாட்டு கொள்கையால், ஐரோப்பாவில் அசைக்க முடியாத ஆட்சியாளரானார் நெப்போலியன். இங்கிலாந்தை தவிர, ஐரோப்பிய நாடுகள் நெப்போலியனின் வசமாயின. நெப்போலியனின் கோபம், தனக்கு அடிபணியாத இங்கிலாந்துடன் வணிக உறவை வைத்திருந்த ரஷியாவின் மீது திரும்பியது. ரஷியாவை அடிபணிய வைக்க கால நிலை பார்க்காமல் 6 லட்சம் வீரர்களுடன் ரஷியாவை அடைந்தார்.

ஆனால் அங்கு கால நிலை மாறியது. பனி பொழிய ஆரம்பித்தது. குளிர் தாங்காது பல வீரர்கள் இறந்தனர். உயிர் பிழைத்தால் போதுமென எண்ணி நாடு திரும்பியபோது உணவு தட்டுப்பாடானது. அவர்கள் ஏறி வந்த குதிரைகள் உணவாயின. பனியில் பலர் உறைந்தனர். இறுதியில் வெறும் 20 ஆயிரம் படைவீரர்களுடன் பிரான்சை அடைந்தான் நெப்போலியன். பின்னர் வாட்டர்லூ போரில் தோற்றதால், அதற்கு முழு பொறுப்பேற்று தனது மணிமுடியை தானே துறந்தார் நெப்போலியன். பின்னர் தானே ஆங்கிலேயரிடம் சரணடைந்தார். 1815-ம் ஆண்டு உணவு கிடைக்காத, மனித உயிர்கள் அதிகம் வசிக்காத செயின்ட் ஹெலனா தீவில் சிறை வைக்கப்பட்டார் நெப்போலியன். தனது வாழ்வை அசைபோட்டபடி ஆறு ஆண்டுகள் வாழ்ந்தார். குடல் புற்றுநோயால் 1821-ம் ஆண்டு மே 5-ம் நாள் இறந்தார். இளைய தலைமுறையே! “வாழ்வதும் வீழ்வதும் அவரவர் எண்ணத்தின் வழியே” என்பது நெப்போலியனின் வரலாற்றால் விளங்கும். எத்தனை வருடங்கள் கடந்தாலும் நெப்போலியன் போன்ற மாவீரனை வையகம் எந்நாளும் வாழ்த்தும்.

இரா.பிறையா அஸ்வத், உதவி பேராசிரியை, வரலாற்றுத் துறை.
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை.

மேலும் செய்திகள்