93 வயதிலும் தொடரும் கல்விச் சேவை
சாந்தம்மாவும் 93 வயதிலும் பல்கலைக்கழக பேராசிரியராக உற்சாகத்துடன் பணிபுரிந்து வருகிறார்.;
ஓய்வு காலத்திற்குப் பிறகு தாங்,கள் பார்த்து வந்த பணியில் இருந்து முழுவதுமாக விலகி வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிப்பதற்கு பலரும் விரும்புவார்கள். அதற்கு விதிவிலக்காக தங்கள் பணியுடன் தொடர்புடைய செயல்பாடுகளில் தொடர்ந்து கவனம் செலுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
அதே பணியிலேயே தங்களை முழுமூச்சாக ஐக்கியப்படுத்திக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். முதுமை அடைந்த பிறகும் தொய்வில்லாமல் தங்கள் பணியை தொடரவும் செய்வார்கள். பேராசிரியர் சாந்தம்மாவும் அப்படிப்பட்டவர்தான். 93 வயதிலும் பல்கலைக்கழக பேராசிரியராக உற்சாகத்துடன் பணிபுரிந்து வருகிறார். அதுவும் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து கல்விப் பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார். சாந்தம்மாவின் பூர்வீகம் ஆந்திர மாநிலத்திலுள்ள மச்சிலிப்பட்டினம்.
1929-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி பிறந்தார். 5 மாத குழந்தையாக இருந்தபோது தந்தையை இழந்தார். தந்தை வழி மாமா மூலம் வளர்க்கப்பட்டார். சிறு வயது முதலே படிப்பில் படுசுட்டியாக இருந்தவருக்கு இயற்பியல் பாடம் ரொம்பவே பிடித்துப் போனது.
ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டப்படிப்பை முடித்தவர், மைக்ரோவேவ் ஸ்பெக்ட்ரோஸ்கோபி எனப்படும் பி.எச்டிக்கு சமமான பட்டத்தையும் பெற்றுள்ளார். இயற்பியலில் தங்கப்பதக்கம் வென்றும் அசத்தி இருக்கிறார். 1956-ம் ஆண்டு ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் விரிவுரையாளராக பணியில் சேர்ந்திருக்கிறார்.
தொடர்ந்து பேராசிரியர், புலனாய்வாளர், எழுத்தாளர், ஆராய்ச்சியாளர் என பல தளங்களில் தனது கல்விப் பணியை தொடர்ந்திருக்கிறார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்), பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை போன்ற பல்வேறு துறைகளில் புலனாய்வு பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பேராசிரியர் சாந்தம்மா 1989-ம் ஆண்டு தனது 60 வயதில் ஓய்வு பெற்றார். ஆனாலும் கல்விப் பணியில் இருந்து விலகவில்லை. ஆராய்ச்சியில் கவனம் செலுத்தியவர் மீண்டும் ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவுரையாளராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். இயற்பியல் கற்பித்தல் மீதான மோகம் அதிகரிக்கவே பேராசிரியர் பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
தற்போது செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தில் பெல்லோஷிப் மூலம் வகுப்புகளை நடத்துகிறார். இவரது கற்பித்தல் பணி சுமார் 65 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்களுடன் தொடர்பில் இருக்க வைத்திருக்கிறது. வயது மூப்பு காரணமாக முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஊன்று கோலின் துணையுடன் நடக்கிறார். தனது உடல்நலம் கல்விச் சேவைக்கு தடையாக இல்லை என்று நம்பிக்கையோடு சொல்கிறார்.
''என் அம்மா 104 வயது வரை வாழ்ந்தார். ஆரோக்கியம் நம் மனதில் உள்ளது. செல்வம் நம் இதயத்தில் உள்ளது. நாம் எப்போதும் மனதையும், இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். நான் ஒரே ஒரு நோக்கத்திற்காகத்தான் வாழ்கிறேன். என் கடைசி மூச்சு வரை கற்பிப்பேன்'' என்கிறார்.
சாந்தம்மாவின் ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு மாணவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ''பேராசிரியர் சாந்தம்மாவின் வகுப்பை தவறவிடுவது எனக்கு பிடிக்காது. நான் எப்போதும் அவரது வகுப்பிற்காக ஆவலுடன் காத்திருப்பேன். அவர் வகுப்பிற்கு தாமதமாக வருவதில்லை.
ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை பின்பற்றுவதில் அவர் எங்களுக்கு ரோல் மாடலாக விளங்குகிறார். அவர் பேசும் கலைக்களஞ்சியம்'' என்கிறார் முதலாம் ஆண்டு பி.எஸ்சி ஆப்டோமெட்ரி மாணவி ஹசீனா.
ஒரு நாளைக்கு குறைந்தது 6 வகுப்புகள் என்னால் பாடம் நடத்த முடியும் என்று உற்சாகமாக சொல்கிறார் சாந்தம்மா. உலகின் வயதான பேராசிரியராகவும் அறியப்படுகிறார். அணு நிறமாலை மற்றும் மூலக்கூறு ஸ்பெக்ட்ரோஸ்கோபி பற்றிய பகுப்பாய்விற்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
புராணங்கள், வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் மீதும் இவருக்கு ஆர்வம் உண்டு. பகவத் கீதை ஸ்லோகங்களை உள்ளடக்கிய 'பகவத் கீதை - தி டிவைன் டைரக்டிவ்' என்ற ஆங்கில புத்தகத்தை எழுதியுள்ளார்.
''என்னுடைய கணவர் சிலுக்குரி சுப்ரமணிய சாஸ்திரி, சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தெலுங்கு பேராசிரியராக இருந்த அவர், எனக்கு உபநிடதங்களை அறிமுகப்படுத்தினார். இளைய தலைமுறையினருக்கு பயன்படக்கூடிய தலைப்புகளில் புத்தகம் வெளியிட நான் அவற்றைப் படித்து வருகிறேன்'' என்றும் சொல்கிறார்.