மாணவியின் மகத்தான 'ஸ்கேட்டிங்' சாதனை
15 வயது மாணவி ஏ.ஜே. ரபியா சக்கியா, தனிநபர் ஸ்கேட்டிங் விளையாட்டில் பல வெற்றிகளைப் பதிந்திருப்பதுடன், சமீபத்தில் தேசிய அளவில் புதிய சாதனைக்கு முயன்றிருக்கிறார்.;
படிப்பு மட்டும் ஒருவர் முன்னேற்றத்திற்கு போதாது, அவற்றுடன் கூடுதல் திறனும் வேண்டும், அதிலும் விளையாட்டுத்திறன் என்பது மிக மிக முக்கியம் என்பதை தற்போதைய வாழ்கை நிரூபித்து வருகிறது. இத்தகைய காலகட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இளைஞர்கள், வெற்றி, தோல்விகளைத் தாண்டி, சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் செயல்படுகிறார்கள். அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஏ.ஜே. ரபியா சக்கியா, தனிநபர் ஸ்கேட்டிங் விளையாட்டில் பல வெற்றிகளைப் பதிந்திருப்பதுடன், சமீபத்தில் தேசிய அளவில் புதிய சாதனைக்கு முயன்றிருக்கிறார். அதாவது, 44 கி.மீ. தூரத்தை 1 மணிநேரம் 46 நிமிடங்களுக்குள் கடந்து உலக அளவிலும், தேசிய அளவிலும் புதிய சாதனை படைத்திருக்கிறார். அதுபற்றி, அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை...
* ஸ்கேட்டிங் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
மெரினா கடற்கரையில் இருக்கும் விளையாட்டு பூங்காவில் நிறையக் குழந்தைகள் ஸ்கேட்டிங் பயிற்சி மேற்கொள்வார்கள். அப்படி ஒருநாள், மெரினா கடற்கரைக்குச் சென்றபோதுதான் ஸ்கேட்டிங் செய்ய ஆசைப்பட்டேன்.
என் விருப்பத்தை அறிந்த பெற்றோர் என்னை ஸ்கேட்டிங் வகுப்புக்கு அனுப்பினார்கள். அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச போட்டியில் 2 தங்கப் பதக்கங்கள் வென்றிருக்கும் என் பயிற்சியாளர் டோனா சதீஷ் ராஜாவின் பயிற்சி ஆகியவற்றால் ஸ்கேட்டிங் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
* ஸ்கேட்டிங் விளையாட்டில், எந்தெந்த நிலைகளைக் கடந்திருக்கிறீர்கள்?
பிகினர்ஸ், குவாட், பேன்ஸி இன்லைன் ஆகிய நிலைகளைக் கடந்து இப்போது புரோபெஷனல் இன்லைன் பயிற்சி பெறுகிறேன்.
* எத்தனை வருடங்களாகப் பயிற்சி பெறுகிறீர்கள்?
கடந்த 6 வருடங்களாகப் பயிற்சி பெறுகிறேன்.
* போட்டிகளில் பங்கேற்றது உண்டா?
ஆம்...! பயிற்சி பெற தொடங்கியது முதல் இப்போது வரை 40-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். அதில் 25 தங்கப்பதக்கமும் வென்றிருக்கிறேன். தேசிய அளவில் 2 தங்கமும், மாநில அளவில் 5 தங்கமும், மாவட்ட அளவில் 18 தங்க பதக்கமும் வென்றிருக்கிறேன். இதுபோக, 30-க்கும் மேற்பட்ட வெள்ளிப்பதக்கங்களும் வென்றிருக்கிறேன்.
* சமீபத்தில் மேற்கொண்ட ஸ்கேட்டிங் சாதனையைப் பற்றிக் கூறுங்கள்?
ஸ்கேட்டிங் விளையாட்டில் பயிற்சி பெற்று, பல வெற்றிகளைப் பதிவு செய்தாலும், அதில் ஏதாவது புதிதாகச் சாதிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். என்னுடைய ஆசைகளை புரிந்துகொண்ட பிளாக் டைகர் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமியின் பயிற்சியாளர், அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தார். அதன்படி, ஸ்கேட்டிங் மூலமாகவே, வெகு தூரத்தைக் குறைந்த நேரத்தில் கடந்து, புதிய உலக சாதனையைப் படைக்கத் திட்டமிட்டேன்.
* இந்த சாதனை முயற்சிக்கான திட்டமிடுதல் பணிகள் எப்போது தொடங்கியது?
கடந்த 6 மாதங்களாகவே, இந்த சாதனை முயற்சிக்குத் தயாராகினோம். ஆரம்பத்தில் 44 கி.மீ. தூரத்தை, ஸ்கேட்டிங் செய்தபடியே 1 மணிநேரம் 48 நிமிடங்களுக்குள், இடைவேளை இல்லாமல் முடிக்கத் திட்டமிட்டோம். அதற்கான சாத்தியக்கூறுகள், வழித்தடங்கள், இந்த சாதனையை இதற்கு முன்பாக வேறு யாரும் முயன்றிருக்கிறார்களா... இப்படி எல்லா விஷயங்களையும் ஆராய்ந்து, சாதனை நிகழ்விற்குத் தயாராக தொடங்கினோம்.
* சாதனை முயற்சி பற்றிக் கூறுங்கள்?
வயலூர் என்ற ஊரிலிருந்து புறப்பட்டு வண்டலூர் வரை சென்று மீண்டும் வயலூர் ஊருக்கே திரும்புவதுதான், எங்களுடைய திட்டம். இதன் பயண தொலைவான, 44 கி.மீ. தூரத்தையும் இன்லைன் ஸ்கேட்டிங் செய்தபடியே, எங்கும் நிற்காமல், வினாடி இடைவேளை கூட இல்லாமல் கடக்க வேண்டும். போட்டி அன்று, அதிகாலை கடும் குளிரில் இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டேன். ஆரம்பத்தில் சில தடைகள் தோன்றினாலும், 44 கி.மீ. தூரத்தையும் கடப்பதில் உறுதியாக இருந்தேன். அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விடவும், விரைவாக எட்டினேன். ஆம்..! 44 கி.மீ.தூரத்தை 1 மணிநேரம் 48 நிமிடங்களில் கடக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், சாதனையின்போது, 2 நிமிடங்கள் முன்னதாக, 1 மணிநேரம் 46 நிமிடங்களிலேயே எட்டிவிட்டேன். இது நாங்கள் எதிர்பார்க்காத வகையில், தேசிய அளவிலும், உலக அளவிலும் பல சாதனைகளுக்கான கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது.
* சாதனையின் போது எதிர்கொண்ட சவால்கள் என்ன?
44 கிலோமீட்டர் பயண தொலைவில், மொத்தம் 12 மேம்பாலங்களைக் கடக்க வேண்டிய கட்டாயம் உருவானது. பொதுவாகச் சமதள சாலைகளில் ஸ்கேட்டிங் செய்துவிடலாம். ஆனால் ஏற்றமும், இறக்கமும் நிறைந்த மேம்பாலங்களைக் கடக்க, கூடுதலான ஆற்றல் தேவைப்படும். இந்நிலையில், 12 மேம்பாலங்களையும் ஸ்கேட்டிங் செய்தபடியே கடந்தது, ரொம்பவும் சவாலாக இருந்தது. குறிப்பாக, இறுதி மேம்பாலத்தைக் கடப்பதற்குள், என் முழு சக்தியையும் இழந்துவிட்டேன். ஏனெனில், 44 கி.மீ. தூரத்தையும் எந்தவிதமான இடைவெளியும் இல்லாமல் நான் நிறைவு செய்ததால், இறுதி மேம்பாலத்தைக் கடப்பதற்குள், ரொம்பவும் சோர்ந்துவிட்டேன்.
* இப்போது எதற்காக தயாராகுகிறீர்கள்?
தேசிய அளவிலான போட்டிகள், ஆரம்பமாகி இருக்கின்றன. அதில் தங்கம் வெல்வதற்காகவே தீவிரமாகப் பயிற்சி செய்கிறேன்.
* உங்களுடைய முயற்சிகளுக்குப் பெற்றோர் உறுதுணையாக இருக்கிறார்களா?
ஆம்..! அப்பா ஜாபர் அலியும், அம்மா சமாஜினும் உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்களது ஊக்கம்தான் என்னை உற்சாகமாக இயங்க வைக்கிறது.
* உங்களுடைய ஆசை?
சர்வதேச அளவில் பல வெற்றிகளைப் பதிவு செய்யவேண்டும். தேசிய அளவிலும் பல சாதனைகள், பல வெற்றிகளைப் பதிவு செய்து, தமிழகத்தைப் பெருமைப்படுத்த வேண்டும். மேலும் என்னுடைய சாதனைகளை, நானே முறியடித்து சாதனை படைக்க வேண்டும்.