கழிவுகளில் கலைநயம் படைக்கும் ஆசிரியை
மாணவர்கள் தனித்திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு நானும் உந்து சக்தியாக இருக்கிறேன் என்பதை நினைக்கும்போது மன நிறைவாக இருக்கிறது என்கிறார் விழுப்புரம் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியை ஹேமலதா.;
மழலைப் பருவம் தொட்டே குழந்தைகள் தொடங்கி முதுகலை மாணவர்கள் வரை அறிவை போதிக்கும் உன்னத வேலையாக ஆசிரியப்பணி திகழ்கிறது. இது கால மாறுதலுக்கு ஏற்ப தன்னை உருமாற்றிக்கொண்டிருக்கிறது. அதற்கேற்ப ஆசிரியர்களும் தங்கள் திறன்களை வளர்த்துக்கொண்டு பன் முகத்தன்மை கொண்டவர்களாக மாறி மாணவ சமு தாயத்திற்கு வழிகாட்டுகிறார்கள். படிப்பு சொல்லிக் கொடுப்பதோடு தங்கள் பணியை முடித்துவிடாமல் மாணவர்களிடத்தில் தனித்திறன்களை வளர்த்து அவர்களின் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறார்கள். அத்தகைய ஆசிரியர்களுள் ஒருவர், ஹேமலதா.
விழுப்புரம் மாவட்டம் செ.குன்னத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியையாக பணி புரிந்து வரும் இவர், கழிவுப் பொருட்களில் கலைநயமிக்க பொருட்களை உருவாக்கி அசத்துகிறார். தான் கற்றுக்கொண்ட கலையை மாணவர்களுக்கும் கற்பித்து அவர்களையும் இளம் கைவினை கலைஞர்களாக தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.
''கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில் மண்ணுலகம் கழிவுகளால் அழிவுகளை சந்திக்க நேரிடும். தூக்கி எறியப்படும் பொருட்களிலிருந்து பயனுள்ள மற்றும் புதுமையான ஒன்றை உருவாக்குவதன் மூலம் கழிவுகள் குவிவது குறையும். அவற்றை ஆக்கப்பூர்வமான, அலங்கார பொருட்களாக உருவாக்கி விடலாம்'' என்கிறார்.
இவர் பனை ஓலைகளில் வித்தியாசமான கலைப்பொருட்களை வடிவமைக்கிறார். அவை கலைநயமிக்க வீட்டு உபயோகப் பொருட்களாக மட்டுமின்றி பாடம் சார்ந்த கற்றல் உபகரணங்களாகவும் பயன்படுகின்றன. அத்துடன் சமூகத்திற்கு விழிப்புணர்வை விதைக்கும் விதமாக காட்சி அளிப்பதும் சிறப்பம்சம்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை விளக்கும் வகையிலும், 'கல்லுடைக்கச் செல்லாதே.. கல்வி கற்க பள்ளிக்கு வா நீ...' என்பதை போதிக்கும் நோக்கத்துடனும், இயற்கை விவசாயத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் தென்னை, பனைக் கழிவுகள் மூலம் பல்வேறு கலைப் பொருட்களை உருவாக்கி இருக்கிறார்.
மாணவர்களையும் அதுபோன்ற கலைப்படைப்புகளை உருவாக்குவதற்கு ஊக்கப்படுத்துகிறார். படிப்பில் பின் தங்கி இருக்கும் மாணவர்களுக்காக கூழாங்கல்லில் வண்ணத் தமிழ் எழுத்துக்களை வரைந்து ஓவியத்தையும் கற்றுத் தருகிறார். மேலும் கொரோனா காலத்தில் பட்டை, கிராம்பு, பூக்கள் உள்பட மூலிகைகளை பயன்படுத்தி சுகாதாரமான வகுப்பறையையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் பாராட்டும் பெற்றுள்ளார்.
''கற்றல் கற்பித்தல் உபகரணத் திட்டத்தின் கீழ் பணியாற்றிய அனுபவம் எனக்கு இதுபோன்ற ஆர்வத்தை தூண்டியது. மாணவ சமுதாயத்திற்கு மட்டுமின்றி மனித சமுதாயத்திற்கும் என்னால் இயன்ற சேவையாக இந்த கலைப்படைப்புகள் உருவாக்க பணியை கருதுகிறேன். கழிவு பொருட்களைத்தான் அதற்கான மூலப்பொருளாக தேர்ந்தெடுக்கிறேன். அதன் மூலம் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்படுத்த முடிகிறது.
கதைத் திறன், பாடும் திறன், சிறுகதைத் திறன், ஓவியத் திறன் போன்ற தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் மாணவர்களை ஊக்கப்படுத்துகிறேன். அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறேன். நான் 30 வருடங்களாக ஆசிரியர் பணியில் இருக்கிறேன். 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறேன். அதோடு மாணவர்கள் தனித்திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு நானும் உந்து சக்தியாக இருக்கிறேன் என்பதை நினைக்கும்போது மன நிறைவாக இருக்கிறது. 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் என்னை பாராட்டியதும் நெகிழ்ச்சியான தருணம்'' என்பவர் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ளார்.
ஆசிரியர் என்ற வட்டத்துக்குள் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாமல், பன்முக கலைஞராகவும் தன்னை மெருகேற்றிக்கொண்டுள்ளார். குறிப்பாக தெருக்கூத்து கலைஞராகவும் நடித்து அசத்தி இருக்கிறார். 100 நாடுகளின் கொடி மற்றும் நாணயங்களை சேமித்தும் சாதனை படைத்துள்ளார்.
இவரிடம் படிக்கும் மாணவர்கள் பலரும் தென்னை, பனைமரங்கள் மற்றும் மக்காச்சோளத்தின் கழிவு பொருட்களை பயன்படுத்தி பல்வேறு வகையிலான கலை நயத்துடன் கூடிய பொருட்களை செய்து வருவதுடன் ஆர்வமாக படிக்கவும் செய்கிறார்கள்.
மேலும் இயற்கை சார்ந்த வாழ்வியல் முறையையும், கல்வியையும் மாணவர்களிடத்தில் விதைக்கிறார். தனது வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து ஏராளமான செடிகளை வளர்க்கிறார். எலுமிச்சை, கொய்யா, நெல்லிக்காய், அல்லி, தாமரை, மிளகாய், தக்காளி, கத்தரி, வெண்டை, வெற்றிலைக்கொடி, ரோஜா என இவரது மாடித்தோட்டம் பசுமை சூழலில் மிளிர்கிறது. அதில் விளையும் காய்கறிகளில் தனது தேவைக்கு போக, மீதமானவற்றை உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் வழங்குகிறார்.
''நகரத்தில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டின் மேல் பகுதியில் இருக்கும் காலி இடத்தில் காய்கறி செடிகள் வளர்க்கலாம். தங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை பெறுவதோடு மற்றவர்களுக்கும் வழங்கலாம்'' என்கிறார்.
மாணவர்கள் தனித்திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு நானும் உந்து சக்தியாக இருக்கிறேன் என்பதை நினைக்கும்போது மன நிறைவாக இருக்கிறது. பிரதமர் 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் என்னை பாராட்டியதும் நெகிழ்ச்சியான தருணம்