எமோஜி சிக்னல்
மனித உணர்வுகளை வெளிப்படுத்தும்விதமாக ‘எமோஜி’ குறியீடுகள் அமைந்திருக்கின்றன.;
மனித உணர்வுகளை வெளிப்படுத்தும்விதமாக 'எமோஜி' குறியீடுகள் அமைந்திருக்கின்றன. அவை மகிழ்ச்சி, சோகம், துக்கம், விரக்தி என அனைத்துவகையான உணர்வுகளையும் வெளிப்படுத்தும் அம்சங்களை கொண்டிருக்கின்றன. டிஜிட்டல் வழியாக வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்திருக்கின்றன. கருத்துக்களை பதிவிடுபவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக இருக்கும் இவை போக்குவரத்து சிக்னல்களிலும் இடம் பெற்றிருக்கின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அங்கமான துபாயின் சில இடங்களில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் இந்த இமோஜிக்கள் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. அவை வாகன ஓட்டிகளின் மன நிலையை பிரதிபலித்து அவர்களுக்கு சாலை விதிகளை உணர்த்தும் பணியை செய்து கொண்டிருக்கின்றன.
வாகன ஓட்டிகள் வேகக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதை கண்காணிக்க ஆங்காங்கே சிக்னல் கட்டமைப்புகள் நிறுவப்பட்டிருக்கின்றன. நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட விரைவாக சென்றால் அதனை குறிப்பிடும் வகையில் கோபமான முக பாவனை கொண்ட எமோஜி அதில் மின்னும். அதிக வேகத்தில் செல்வதாக எச்சரிக்கையும் செய்யும்.
எவ்வளவு வேகத்தில் செல்கிறார் என்பது சிக்னலில் தெரியும். அதற்கேற்ப எமோஜி குறியீடுகள் மாறிக்கொண்டே இருக்கும். மிதமான வேகத்தில் ஒருவர் சென்றால் அவரை பாராட்டும் விதமாக புன்னகைக்கும் எமோஜி காட்சி அளிக்கும்.
அதி வேகம் சென்றால் கோபத்தை வெளிப்படுத்தும் எமோஜி குறியீடுடன் எச்சரிக்கும் வாசகமும் இடம் பெறும். பள்ளிகள் உள்ள பகுதிகளில் இந்த எமோஜி சிக்னல்கள் அதிகம் நிறுவப்பட்டிருக்கின்றன.