'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தை பதிவு செய்வது எப்படி?
எம்.எஸ்.எம்.இ. எனப்படும் சிறு/குறு தொழில் சிந்தனைகளை, தொழில் முயற்சிகளை பதிவு செய்வதற்காக தொடங்கப்பட்டதுதான், உதயம் போர்டல்.;
இது மத்திய அரசால் நிர்வகிக்கப்படுகிறது. உங்களது ஸ்டார்ட் அப் சிந்தனைகளை எப்படி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யலாம் என்பதை இந்த கட்டுரையில், மேக்ஸிடோம் சுப்பிரமணி விளக்குகிறார்.
உதயம் போர்டல் (Udyam portal) என்பது மத்திய அரசால் தொடங்கப்பட்ட, எம்.எஸ்.எம்.இ. பதிவு வலைத்தளமாகும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன அமைச்சகத்தின் உதயம் போர்டல் என்பது சிறு, குறு அல்லது நடுத்தர நிறுவனங்களை நிறுவ விரும்பும் ஒரு தொழில்முனைவோர் தங்கள் நிறுவனங்களை பதிவு செய்ய உதவுவதற்கான முற்றிலும் ஆன்லைன் செயல்முறை ஆகும். உங்களுடைய தொழில் முயற்சிகளை, இந்த இணையத்தில் பதிவு செய்வதன் மூலம், உங்களுக்கு என பிரத்யேக அடையாள எண் வழங்கப்படும். அந்த அடையாள எண்ணை கொண்டுதான், தொழில் சம்பந்தமான மற்ற நிலைகளுக்கு பயணிக்க முடியும்.
* ஏன் அவசியம்?
உங்களுடைய முயற்சிகளை, தொழில் முயற்சியாக பதிவு செய்யவும், உங்களை ஒரு நிறுவனமாக மாற்றிக்கொள்ளவும், உதயம் போர்டல் வழிவகுக்கிறது.
* என்ன நன்மைகள்..!
* வங்கிகளிடமிருந்து பிணை இல்லாத கடன்களைப் பெற உதவுகிறது.
* பதிவுசெய்யப்பட்ட எம்.எஸ்.எம். நிறுவனங்கள் சர்வதேச வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்கவும், பிரத்யேகமான வழிகாட்டுதல்களை பெறவும் உதவுகின்றன.
* பதிவு கட்டணம் மற்றும் முத்திரை கடனை தள்ளுபடி செய்ய அனுமதிக்கிறது.
* நேரடி வரிச் சட்டங்களின் கீழ் வரி விலக்குகள் கிடைக்கின்றன.
* பார்கோடு பதிவு செய்ய மானியம் கிடைக்கிறது.
* என்.எஸ்.ஐ.சி/ செயல்திறன் மற்றும் கடன் மதிப்பீடுகளுக்கு மானியம் கிடைக்கும்.
* சி.எல்.சி.எஸ்.எஸ் திட்டத்தின் கீழ், தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு 15 சதவிகிதம் மானியம் கிடைக்கிறது.
* ஐ.எஸ்.ஓ. சான்றிதழைப் பெறுவதற்கு செலுத்தப்பட்ட கட்டணத்தை திருப்பி பெற முடியும்.
* என்னென்ன விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்?
பதிவுசெய்த பிறகு ஒவ்வொரு நிறுவனத்திற்கும் 19 இலக்க நிரந்தர பதிவு எண் வழங்கப்படுகிறது. இந்த பதிவு எண்ணுக்கு புதுப்பித்தல் தேவையில்லை. இந்த செயல்பாட்டின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனம் உதயம் என்றும், அதற்கு ஒதுக்கப்பட்ட நிரந்தர அடையாள எண் 'உதயம் பதிவு எண்' என்றும் அறியப்படும். பதிவு முடிந்ததும், ஆன்லைனில் ஒரு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழில் கியூ ஆர் (QR) குறியீடு இருக்கும். அதில் இருந்து நிறுவனத்தின் விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
உதயம் பதிவு செய்வதற்கான செயல்முறை முற்றிலும் ஆன்லைன் முறையில் நடக்கக்கூடியது. இது முற்றிலும் இலவசம் மற்றும் எந்தவொரு கட்டத்திலும் செலவுகள் அல்லது கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டியதில்லை.
* என்ன தேவை?
எம்.எஸ்.எம்.இ ஆக பதிவு செய்ய, ஆதார் எண்ணைத் தவிர, வேறு எந்த ஆவணங்களும் அல்லது ஆதாரங்களும் பதிவேற்றப்பட வேண்டியதில்லை. ஒரு உரிமையாளர் நிறுவனத்தின் விஷயத்தில் உரிமையாளரின் ஆதார் எண் கொடுக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் ஒரு கூட்டு நிறுவனம் என்றால் நிர்வாக பங்குதாரரின் ஆதார் வழங்கப்பட வேண்டும். ஒரு நிறுவனம், ஒரு உதயம் பதிவை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இருப்பினும், உற்பத்தி அல்லது சேவை அல்லது இரண்டும் போன்ற எந்தவொரு நடவடிக்கைகளையும் ஒரே பதிவின் கீழ் சேர்க்கலாம்.
* எப்படி விண்ணப்பிப்பது?
உதயம் பதிவு போர்ட்டலைப் பார்வையிடவும். புதிய தொழில்முனைவோருக்கான பக்கத்தை சொடுக்கவும். அதில் உரிமையாளர் அல்லது நிர்வாக இயக்குனர் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும். கூடவே தொழில்முனைவோரின் பெயரையும் குறிப்பிடவும். இவை கடந்த பிறகு, ஆதார் தொடர்புடைய தொலைபேசி எண்ணிற்கு, ஓ.டி.பி. வரும். அதை உள்ளிட்டு, விண்ணப்பத்தை நிரப்பவும். உங்கள் சான்றிதழ் உரிய நேரத்தில் உருவாக்கப்படும். அதை நகல் பிரதி எடுத்து கொள்ளலாம்.