பிரமாண்ட சுரங்கம்
அமெரிக்காவின் உடா (Utah) மாகாணத்தில் சால்ட் லேக் நகரத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கென்னகாட் தாமிரச் சுரங்கமே (Kennecott Copper Mine) உலகின் மிகப் பெரிய சுரங்கமாகும்.;
இங்கு தாமிரம் அதிக அளவில் கிடைக்கிறது. இதற்கு பிங்காம் கேன்யன் சுரங்கம் (Bingham Canyon Mine) என்று இன்னொரு பெயரும் உண்டு. இது இங்கிலாந்தை சேர்ந்த ரியோ டின்டோ (Rio Tinto Group) என்ற சர்வதேச நிறுவனத்திற்குச் சொந்தமானது.
1906-ம் ஆண்டு முதல் இந்தச் சுரங்கத்தில் உற்பத்தி நடைபெற்று வருகிறது. சுமார் ஒரு கிலோ மீட்டர் ஆழத்துடனும், 4 கி.மீ. அகலத்துடனும், 1900 ஏக்கர் நிலப்பரப்பிலும் அமைந்துள்ளது. 1966-ம் ஆண்டிலிருந்து தேசிய வரலாற்றுச் சின்னமாக்கப்பட்டு, பிங்காம் கேன்யான் ஓபன் பிட் காப்பர் மைன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2013 ஏப்ரலில் பெரிய அளவிலும், செப்டம்பரில் சிறிய அளவிலும் இங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
1848-ம் ஆண்டு முதன்முதலில் பிங்காம் பள்ளத்தாக்கில் தாமிரம் இருப்பது சான்போர்டு பிங்காம், தாமஸ் பிங்காம் என்ற இரு சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சுரங்கத்தில் 2004-ம் ஆண்டு வரை 1 கோடியே 70 லட்சம் டன் தாமிரமும், 2 கோடியே 30 லட்சம் அவுன்ஸ் தங்கமும், 19 கோடி அவுன்ஸ் வெள்ளியும், 85 கோடி பவுண்டுகள் மாலிப்டீனியமும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. விண்வெளியிலிருந்து தொலைநோக்கி ஏதுமின்றி வெறுங்கண்ணால் பார்த்தாலும் தெரியக்கூடிய பிரமாண்ட சுரங்கம் இது.