'படிக்காத விஞ்ஞானி' உருவாக்கிய 'சோலார் மிக்ஸி'
எலெக்ட்ரானிக்ஸ் தொடர்பான விஷயங்களை தானாகவே தெரிந்து கொண்டு, ‘செல்ப் மேட்' எலெக்ட்ரானிக்ஸ் நிபுணராக உருவாகியவர் பிஜு.;
ஏனென்றால் இவர் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்று படிக்கவில்லை. அப்படி இருந்தும், இவர் 15 அம்சங்களுடன் சூரியசக்தியில் இயங்கும் மிக்ஸியை உருவாக்கி உள்ளார். கேரளாவை சேர்ந்தவரான இவர், இது குறித்து கூறுைகயில், ''என் குழந்தைப் பருவத்தில் கிராமத்தில் வானொலி வாங்குவதே கஷ்டம். இருப்பினும் நானே உருவாக்க திட்டமிட்டேன். எலெக்ட்ரானிக்ஸ் தொடர்பாக நானே தேடித்தேடி கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். இதில் எனக்கு யாரும் வழிகாட்டிகள் கிடையாது. புத்தகங்கள் படித்தும் எனது அனுபவத்தைக் கொண்டும் நிறைய கற்றுக் கொண்டேன்.
வெற்றிகரமாக, 12 வயதில் வானொலியை உருவாக்கியதும் என் வாழ்க்கையில் புதிய பாதை திறந்தது. தொடர்ந்து எலெக்ட்ரானிக்ஸ் கண்டுபிடிப்புகளை செய்து அதையே தொழிலாக்கிக் கொண்டேன். தினமும் நாம் சந்திக்கும் பிரச்சினைக்கு நான் தீர்வு காண விரும்புகிறேன்.
இதுவரை 20-க்கும் மேற்பட்ட எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களைக் கண்டுபிடித்துள்ளேன். தற்போது சூரியசக்தியிலும், மின்சாரத்திலும் இயங்கும் ஹைபிரிட் மிக்ஸியை உருவாக்கியுள்ளேன். இதை 8 மணி நேரம் வரை பேட்டரியில் இயக்க முடியும். நான் உருவாக்கியுள்ள மிக்ஸியில் 15 விதமான அம்சங்கள் உள்ளன.
அரைப்பதற்கு மட்டுமின்றி, தேங்காயை சீவுவதற்கும், காய்கறிகளை வெட்டுவதற்கும், செல்போன் சார்ஜ் மற்றும் வீட்டை சுத்தம் செய்யும் வேக்யூம் கிளீனராகவும் இதைப் பயன்படுத்தலாம்'' என்றார்.
2021-ம் ஆண்டுக்கான கேரள அரசின் கிராமப்புற கண்டுபிடிப்பாளருக்கான விருதை பிஜு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.