திகைக்க வைக்கும் தீவு கிராமம்

வீடுகளுடன் காட்சி அளிக்கும் இந்த சின்னஞ்சிறு தீவு கிராமத்திற்கு பெயர் சம்பு காங்க்போக்.

Update: 2023-02-07 16:09 GMT

இமயமலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பள்ளத்தாக்குகள், ஆறுகள், நன்னீர் ஏரிகள் என அழகிய நிலப்பரப்பை கொண்டுள்ள மாநிலம் மணிப்பூர். இங்குள்ள ஏரிகளில் மிகவும் புகழ் பெற்றது லோக்டக் ஏரி. நீர் நிலைகளுக்கு மத்தியில் புல்வெளிகள் சூழ்ந்த நிலப்பரப்பையும் கொண்டிருப்பது இதன் சிறப்பம்சம். கடல் போல் பரந்து விரிந்திருக்கும் அந்த ஏரியில் ஆங்காங்கே பசுமை படர்ந்த புல்வெளிகள், பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்து படைக்கும் விதமாக வட்ட வடிவில் சூழ்ந்திருப்பது வியப்புக்குரியது.

அந்த சிறு நிலப்பரப்புக்குள் சின்னஞ்சிறு வீடுகள் அமைத்து மக்கள் வசிப்பது மற்றொரு ஆச்சரியம். திரும்பிய திசையெல்லாம் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் படகின் துணையோடுதான் பயணிக்க முடியும். அருகில் இருக்கும் வீட்டுக்கு செல்லவேண்டுமானால் கூட படகுகள்தான் வழிகாட்டும்.

ஆங்காங்கே வீடுகளுடன் காட்சி அளிக்கும் இந்த சின்னஞ்சிறு தீவு கிராமத்திற்கு பெயர் சம்பு காங்க்போக். இங்கு சுமார் 130-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. சுமார் 400 பேர் அங்கு வசிக்கிறார்கள். இதுதான் பூமியில் இருக்கும் ஒரே இயற்கையான மிதக்கும் கிராமம் என்று கூறப்படுகிறது.

வடகிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய நன்னீர் ஏரியாகவும் லோக்டக் ஏரி விளங்குகிறது. மணிப்பூரின் பொருளாதாரத்திலும் இந்த ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த அளவிற்கு பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த ஏரியின் பரப்பளவு சுமார் 287 சதுர கிலோ மீட்டர். மழைக்காலத்தில் இதன் பரப்பளவு 500 சதுர கிலோ மீட்டர் தூரம் வரை நீளும். பழமையான இந்த ஏரி மொய்ராங் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

இங்கு மிதக்கும் தேசிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அது சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. சங்காய் எனப்படும் மாநில விலங்கும் இங்கு வசிக்கிறது. இது அழிந்து வரும் விலங்கினமாக அறியப்படுகிறது. அதற்கு அடைக்கலம் கொடுக்கும் கடைசி இயற்கை தங்குமிடமாகவும் இந்த ஏரி அமைந்திருக்கிறது.

லோக்டக் ஏரியின் மேற்பரப்பில் வட்ட வடிவில் மிதக்கும் புல்வெளி போன்ற பகுதி பரப்பு சதுப்பு நிலமாகும். முன்னொரு காலத்தில் சதுப்பு நிலமாக இருந்த இந்தப் பகுதி பல்வேறு காலகட்டங்களில் சிதைவுற்று வட்ட வடிவ பின்னணிக்கு மாறிவிட்டது. இதனை உள்ளூர் மொழியில் பும்டிஸ் என்று அந்த பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.

இந்த ஏரியில் பல்வேறு வகையான நீர் வாழ் தாவரங்கள் உள்ளன. அரிய வகை தாவரங்களும் இருக்கின்றன. நூற்றுக்கணக்கான பறவைகளும் உலவுகின்றன. பாம்புகள், அரிய வகை மான் உள்பட 400 வகையான விலங்கினங்களின் புகலிடமாகவும் லோக்டக் ஏரி தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த ஏரி நீர், அந்த பகுதியின் முக்கிய நீராதாரமாகவும் விளங்குகிறது. நீர், பாசனத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. இந்த ஏரியின் அழகை பார்வையிடவும், படகு சவாரி மேற்கொள்ளவும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்