சும்மாவே இருப்பதும் தனி வேலைதான்..!
ஜப்பானைச் சேர்ந்த ஷோஜி மோரிமோட்டோ. இவர் சும்மா இருப்பதற்காக, வாடிக்கையாளர்களுக்கு விநோத சேவை ஒன்றை வழங்கி வருகிறார்.;
ஷோஜி மோரிமோட்டோ
வேலையே இல்லாமல் சும்மா இருப்பது எவ்வளவு கடினமான வேலை தெரியுமா...? என்ற வடிவேலு காமெடியை நிஜத்தில் நடத்திக் காட்டி வருகிறார் ஜப்பானைச் சேர்ந்த ஷோஜி மோரிமோட்டோ. இவர் சும்மா இருப்பதற்காக, வாடிக்கையாளர்களுக்கு விநோத சேவை ஒன்றை வழங்கி வருகிறார். அதாவது எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இவரை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
ஜப்பானின் 'do nothing guy' என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், இந்த சேவைக்காக கட்டணம் வசூலிக்கிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில் "எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதற்காக மக்கள் என்னை வாடகைக்கு எடுப்பார்கள். அவர்களுடன் இருக்கும்போது, தேவையானவற்றுக்கு மட்டும் பதில் அளிப்பேன். உணவு விடுதிகளுக்கு அழைத்துச் சென்றால் அவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிடுவேன். வாடிக்கையாளர்கள் குறித்து அறிந்துகொள்ள ஆர்வம் காட்ட மாட்டேன்" என்கிறார்.
ஷோஜியை வாடகைக்கு எடுப்பதற்கு பொதுமக்கள் பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள். புதிதாக திறக்கப்பட்ட கடைக்கு ஆட்கள் வரவில்லை என அதன் உரிமையாளர் ஷோஜியை வாடகைக்கு எடுத்து அவருக்கு உணவு வழங்கி இருக்கிறார்.
தனியாகச் செல்ல விரும்பாத இடங்களுக்கு அழைத்துச் செல்லவும், ஒன்றாகச் சேர்ந்து உணவு உண்ணவும் பலர் ஷோஜியின் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இது சும்மா இருக்கும் வேலை என்றாலும் அதற்கு சேவை கட்டணம் வசூலிக்கிறார் ஷோஜி. ஒரு முறை அவரது சேவையைப் பெற 10 ஆயிரம் யென் அல்லது 85 அமெரிக்க டாலர்கள் செலவாகும். அதாவது இந்திய ரூபாயில் 7 ஆயிரம் கொடுக்க வேண்டும்.
இதோடு ஷோஜிக்கான பயணக் கட்டணத்தையும் வழங்க வேண்டும். அதேபோல, வெளியில் அழைத்துச் செல்லும்போது ஆகும் செலவை வாடிக்கையாளர் பார்த்துக் கொள்ள வேண்டும். இவரது சேவையை பயன்படுத்திக்கொள்ள பலர் முன்வர பொதுவான காரணம், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னுடன் இருக்க ஒரு துணை வேண்டும் என்பதுதான்.
"தனிமையாக உணர்பவர்கள் என்னை வாடகைக்கு எடுக்கின்றனர்" என்று கூறும் ஷோஜி, சும்மா இருந்தாலும் பணி காரணமாக சுறுசுறுப்புடன் இருக்கிறார். ஒரு நாளைக்கு மூன்று வாடிக்கையாளர்களை அவர் சந்திக்கிறார். சும்மா இருக்கும் அனுபவம் தனக்கு பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்து இருப்பதாகவும், இது தனக்கு வருமானத்தையும், அவர்களுக்கு மன ஆறுதலையும் அளிப்பதாகவும் கூறுகிறார் ஷோஜி.