இந்தியாவின் மிக முக்கியமான ரேடியோ டெலஸ்கோப் எது?

Update:2023-07-21 15:37 IST

மேற்கு மகாராஷ்டிராவில் புனேவிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, 'டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச்' நிறுவனம். இதன் ஒரு பிரிவாக, 1995-ல் உருவான 'நேஷனல் சென்டர் பார் ரேடியோ அஸ்ட்ரோபிசிக்ஸ்' மையத்தில் மிகப்பிரமாண்டமான டிஷ் ஆன்ட்டெனா விண்ணை நோக்கித் தவமிருக்கிறது.

மங்கிய நிலவொளியிலும் மிக அழகாகக் காணப்படும் அது, இரவு வானின் கோடிக்கணக்கான நட்சத்திரங்களை உளவு பார்த்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள், அங்கிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள ஆய்வகத்தில் பிரத்யேக கணினியில் சேமிக்கப்பட, விஞ்ஞானி ஒருவர் கணிப்பொறித் திரைகள் முன் கவனத்துடன் அமர்ந்திருக்கிறார். விண்வெளி உலகின் எண்ணிலடங்காத தகவல்களை சேமித்துக்கொண்டிருக்கும் அந்த கணினி இருக்கும் அறை 14 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் பராமரிக்கப்படுகிறது.

தொலைக்காட்சி, வானொலி, செல்போன் சிக்னல், மைக்ரோவேவ் உள்பட எந்த கதிர்களும் அலைகளும் உள் நுழையாதபடி மிக நுணுக்கமாக அமைக்கப்பட்டிருக்கிறது, அக்கட்டிடம். குடை போல விரிந்திருக்கும் ஏராளமான ஆண்டனாக்களை இயக்கும் ஸ்விட்ச்சுகளும், அந்த அறையில்தான் இருக்கும். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அழுத்திய உடன், 'விர்ர்ர்' என்ற ஒலி கிளம்பி, ஆண்டனாக்கள் நகர ஆரம்பிக்கும். எந்த திசையில் ஆராய கட்டளை பிறப்பித்திருக்கிறார்களோ, அந்த பகுதியை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றியது போல ஆராய்கிறது.

இதுபோல மொத்தம் 30 ஆன்ட்டெனாக்கள். ஒவ்வொன்றின் எடையும் 80 டன். உற்றுநோக்கினால், அவை 7 மாடிக் கட்டிடத்தை விட உயரமாக இருப்பது தெரிய வரும்! 25 கிலோமீட்டர் சுற்றளவில் வட்டமாக அமைக்கப்பட்டிருக்கிற இவை, பூமியிலிருந்து வானத்தின் 80 சதவீதப் பரப்பை ஆராயக் கூடிய, இந்தியாவின் மிக முக்கிய ரேடியோ டெலஸ்கோப்கள்.

என்ன செய்கிறார்கள் இங்கு?

வானிலுள்ள ஹைட்ரஜன் மேகங்கள், நியூட்ரான் நட்சத்திரங்கள்... இப்படி சகலத்தையும் ஆராய்கிறார்கள். அதோடு, மனிதகுலம் கால காலமாகக் கேட்டு வரும் 'பிரபஞ்சம் எப்படித் தோன்றியது' என்ற கேள்விக்கு முழுமையான விடை தேடுகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்