அரசு பஸ்சில் கட்டணமில்லாமல் 10 கோடி பேர் பயணம்

திருச்சி மாவட்டத்தில் அரசு பஸ்சில் கட்டணமில்லாமல் இதுவரை 10 கோடிபேர் பயணம் செய்துள்ளதாக திருச்சி மண்டல பொதுமேலாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-07 19:21 GMT

திருச்சி மாவட்டத்தில் அரசு பஸ்சில் கட்டணமில்லாமல் இதுவரை 10 கோடிபேர் பயணம் செய்துள்ளதாக திருச்சி மண்டல பொதுமேலாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

நகர பஸ்கள்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு போக்குவரத்துக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பஸ்களில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என உத்தரவிட்டார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பகோணம்) லிட்., திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மே 7-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை 335 சாதாரண கட்டண நகர பஸ்கள் மூலம் இயக்கப்படும் அனைத்து வழித்தடங்களிலும் 9 கோடியே 94 லட்சம் முறை மகளிரும், 45 லட்சம் முறை திருநங்கைகளும், 9 கோடியே 55 லட்சம் முறை மாற்றுத்திறனாளிகளும் 40 லட்சம் முறை மாற்றுத்திறனாளிகளின் துணையர்களும் ஆக மொத்தம் 10 கோடியே 4 ஆயிரம் முறை மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளி பயணிகள் கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர்.

திருச்சி மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு கட்டணமில்லா பயணம் செய்த மகளிர் எண்ணிக்கை 2 லட்சத்து 71 ஆயிரம் மற்றும் மொத்த பயணிகளில் நாள் ஒன்றுக்கு கட்டணமில்லா பயணம் செய்யும் மகளிர் 60.05 சதவீதமாகும்.

பொதுமக்கள் வரவேற்பு

மகளிரின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவிடும் வகையில் முதல்-அமைச்சரால் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பகோணம்) லிட்., திருச்சி மண்டல பொதுமேலாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்