கொசுப்புழு ஒழிப்பு பணிக்கு 120 பேர் நியமனம்

திண்டுக்கல்லில் வீடு, வீடாக சென்று கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபட 120 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2023-10-02 21:15 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதையடுத்து மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது. டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவுகிறது. மழைநீர், குடிநீரில் ஏடிஸ் கொசுக்கள் அதிகமாக உருவாகின்றன.

எனவே மழைநீர் தேங்குமாறு திறந்தவெளியில் டயர்கள், இளநீர் ஓடுகள், சிரட்டை, உரல் ஆகியவற்றை போடக்கூடாது என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனையும் நடத்துகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்தவெளியில் கிடந்த 100 டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொசுப்புழு ஒழிப்பு

இதுதவிர வீடுகளில் தண்ணீர் தொட்டி, குளிர்சாதன பெட்டியில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உருவாகாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக மாநகராட்சியில் மொத்தம் 120 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வீடு, வீடாக சென்று தண்ணீர் தொட்டி, குளிர்சாதன பெட்டி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றுப்புற பகுதிகளை சோதனை செய்கின்றனர்.

அதுமட்டுமின்றி வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள், சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர் ஆகியவற்றில் ஏடிஸ் கொசுக்களின் புழுக்கள் உருவாகி இருப்பது தெரிந்தால் உடனே அபேட் மருந்து ஊற்றி அழிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் நகர்நல அலுவலர் செபாஸ்டியன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பல்வேறு இடங்களில் வீடு, கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அபேட் மருந்து ஊற்றி கொசுப்புழுக்களை அழித்தனர். அதேபோல் மழைநீர் தேங்குமாறு திறந்தவௌியில் கிடந்த தொட்டிகளையும் அகற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்