போக்குவரத்து தொழிலாளர்களின் 15-வது ஊதிய ஒப்பந்தம்: தமிழக அரசு சார்பில் குழு அமைப்பு

போக்குவரத்து ஊழியர்களிடம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று சென்னையில் நடந்தது.

Update: 2024-02-08 05:06 GMT

சென்னை,

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 9, 10-ந் தேதிகளில் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஐகோர்ட்டு அறிவுரையின்படி வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தையானது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் ஆணையரக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தொழிலாளர் துறை தனி இணை ஆணையர் எல்.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், சென்னை போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் மற்றும் பிற போக்குவரத்துக் கழகங்களின் மனிதவள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், தொழிற்சங்கங்கள் சார்பில் சி.ஐ.டி.யு. தலைவர் ஏ.சவுந்தரராஜன், செயலாளர் ஆறுமுக நயினார், அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில தலைவர் தாடி மா.ராசு, மாநில செயலாளர் கமல கண்ணன், நாம் தமிழர் தொழிற்சங்க பேரவை தலைவர் அன்பு தென்னரசு உள்ளிட்ட 27 தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுடன் மீண்டும் வருகிற 21-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கபட்டது.

இந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு சார்பில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் நிதித்துறை கூடுதல் செயலாளர், போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் இடம்பெற்றுள்ளனர்.போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் உடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த குழு திட்டமிட்டுள்ளது. மேலும் குழு அமைக்கப்பட்டது தொடர்பான கடிதம் தொழிற்சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைகளின்படி ஊதிய ஒப்பந்தம் குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்