தொடர் புகார்கள் எதிரொலி: சான்றிதழ்கள், பட்டா மனுக்கள் மீது இனி 16 நாட்களில் தீர்வு

சான்றிதழ்கள், பட்டா மனுக்கள் மீது 16 நாட்களில் தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-05-25 20:38 GMT

கோப்புப்படம்

சென்னை,

பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான சாதி சான்றிதழ், இருப்பிடம், வருமானம், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட 26 சான்றிதழ்கள் மற்றும் பட்டாக்களை வருவாய்த்துறை வழங்கி வருகிறது. இவை எளிதாக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், வெளிப்படை தன்மையை உறுதி செய்வதற்காகவும் இந்த சேவைகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டு உள்ளது.இருப்பினும் இந்த சான்றிதழ்கள் மற்றும் பட்டாக்கள் பெறுவதில் மக்கள் அலையாய் அலைய வேண்டி உள்ளது. லஞ்சம் கொடுத்தால்தான் காரியம் நடக்கிறது என்று பொதுமக்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக தற்போது பட்டா மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் பணிகளின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான எஸ்.கே.பிரபாகர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

வருவாய்த்துறை வழங்கும் 26 சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் கோரிக்கைகள் ஆகியவை குறித்த நேரத்தில் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வாரந்தோறும் நில அளவை ஆணையரகம் ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறது. அதனை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு தாலுகாவிற்கும் துணை கலெக்டர் அந்தஸ்தில் ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். அவருக்கு உதவியாக ஒரு துணை தாசில்தார் மற்றும் பிற தாலுகாவை சேர்ந்த ஒரு அலுவலர் பணியமர்த்த வேண்டும்.

இந்த சிறப்பு அதிகாரி, சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல்கள் குறித்த மனுக்கள் மீது தொடர்ச்சியாக ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். அவர், பட்டா மனுக்கள் மற்றும் சான்றிதழ்கள் கோரும் விண்ணப்பங்கள் மீது அதிகபட்சமாக 16 நாட்களுக்குள் தீர்வு காண்பதை உறுதி செய்யவேண்டும். மேலும் சிறிய காரணங்களை கூறி மனுக்கள் தள்ளுபடி செய்வது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

அதேபோல் தேதி வாரியாக வரிசைப்படி மனுக்களுக்கு ஒப்புதல் தரவேண்டும். அதாவது பின்னே விண்ணப்பம் செய்பவர்களுக்கு முன்னதாகவும், முன்னே விண்ணப்பம் செய்தவர்களுக்கு பின்னதாகவும் தரக்கூடாது. வரிசைப்படி முறையாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்