நடிகை திரிஷாவின் தாய் உமா, போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் ‘ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்தை திரிஷா வெளியிடவில்லை’

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பு செயல்பட்டு வரும் நிலையில், அந்த அமைப்பில் உள்ள நடிகை திரிஷாவுக்கும் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

Update: 2017-01-16 20:50 GMT

சென்னை,

நடிகை திரிஷாவின் டுவிட்டர் கணக்கை முடக்கி தவறான பதிவு வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்தை அவர் வெளியிடவில்லை என்றும் பெருநகர சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜிடம் திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் நேற்று புகார் மனு அளித்தார்.

திரிஷாவுக்கு எதிர்ப்பு

இதற்கிடையே, திரிஷா தனது டிவிட்டர் பதிவில், ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்தை தெரிவித்ததற்கு மேலும் எதிர்ப்பு வலுத்தது.

காரைக்குடியில் அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் முற்றுகையிட முயன்றனர். மேலும், சென்னை உள்ளிட்ட நகரங்களில், திரிஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.

இந்த நிலையில், நடிகை திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் நேற்று சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு வந்து, போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர், உமா கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

டுவிட்டர் கணக்கு முடக்கம்

எனது மகள் திரிஷாவின் டுவிட்டர் கணக்கை யாரோ முடக்கியுள்ளனர். ஜல்லிக்கட்டு தொடர்பாக கடைசியாக அவர் வெளியிட்ட பதிவு, அவரது சொந்த கருத்து கிடையாது. டுவிட்டர் கணக்கை முடக்கியவர்கள் அதை பதிவு செய்துள்ளனர். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த திரிஷா தனது டுவிட்டர் கணக்கு பாஸ்வேர்டை மாற்றிவிட்டார்.

ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்தை திரிஷா கொண்டவரல்ல. அவர் தமிழ் கலாசாரம், பண்பாட்டில் வளர்ந்த பெண். ஜல்லிக்கட்டை பற்றி நன்கு அவருக்கு தெரியும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெரு நாய்களை எடுத்து வளர்ப்பதை ஊக்குவிப்பதற்காக பீட்டா அமைப்பில் திரிஷா சேர்ந்தார். அதன்பிறகு, அந்த அமைப்பில் பெரிய அளவில் திரிஷா செயல்படவில்லை.

பாதுகாப்பு அளிக்க உறுதி

படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளவே அவருக்கு நேரம் சரியாக இருந்ததால், மற்ற வி‌ஷயங்களில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தார். ஆனால், தற்போது அவருக்கு எதிர்ப்பு வலுத்திருப்பது வேதனை அளிக்கிறது. திரிஷாவின் டுவிட்டர் கணக்கை முடக்கியவர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜிடம் புகார் அளித்துள்ளேன்.

மேலும், காரைக்குடியில் திரிஷா சந்தித்த பிரச்சினை முதல் தற்போது நடந்தது வரை அனைத்தையும் போலீஸ் கமி‌ஷனரிடம் கூறியிருக்கிறேன். அவரும், திரிஷாவுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதாக கூறியிருக்கிறார். பீட்டா அமைப்பில் நடிகை திரிஷா இனி தொடரமாட்டார்.  இவ்வாறு உமா கிருஷ்ணன் கூறினார்.

மேலும் செய்திகள்