மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டம் சென்னை மாநகர போலீசார் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை

மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மாநகர போலீசார் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

Update: 2017-01-17 11:50 GMT

சென்னை,

மதுரை அலங்காநல்லூரில் சுப்ரீம் கோர்ட்டு தடையை மீறி பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். காளை மாடுகளை பறிமுதல் செய்தனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் காட்டு தீ போல பரவியது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தடியடி நடத்திய போலீசார் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் சமூக வலைத்தளம் மூலம் இந்த போராட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலை 9.30 மணியளவில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுக் கூடினர்.

விவேகானந்தர் இல்லம் எதிரே மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் இந்த இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.

ஒவ்வொரு கிராமங்களிலும் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கி, அதில் நாட்டு மாடு இனங்களை பாதுகாப்போடு வழங்க வேண்டும். அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

தடியடி நடத்திய போலீசார் மன்னிப்பு கேட்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கையில், ’ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத தமிழக எம்.பி.க்கள் 39 பேரும் ராஜினாமா செய்ய வேண்டும்’. ’பீட்டா அமைப்பே நாட்டைவிட்டு வெளியேறு’. ’மாடுகள் எங்களது குழந்தைகள்’ உள்பட வாசகங்கள் அடங்கிய பாதகையை வைத்திருந்தனர்.

11.30 மணியளவில் லட்சிய தி.மு.க. தலைவரும், சினிமா பிரமுகருமான டி.ராஜேந்தரர் தனது கட்சி தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்தார். அப்போது அவருடைய தொண்டர்கள் கட்சி கொடியை பிடித்துக்கொண்டு வந்தனர். இதற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கூட்டத்தில் இருந்து காலி தண்ணீர் பாட்டில்கள் பறந்தன. இதையடுத்து லட்சிய தி.மு.க. தொண்டர்கள் அவர்களுடைய கட்சி கொடியை கீழே இறங்கினர். அதன்பின்னர் போராட்டம் நடந்த பகுதிக்கு டி.ராஜேந்திரர் வந்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் டி.ராஜேந்திரர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. இதில் காளை மாடுகளை யாரும் கொடுமை செய்வது இல்லை. ஆனால் இந்த ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் தமிழக இளைஞர்கள் எழுச்சி பெற்று, போராட்டத்தில் குதித்துள்ளனர். உணவின்றி உணர்வுடன் இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

காளைகளை வதைக்கின்றோம் என்றுக் கூறி இந்த இளைஞர்களை வதைக்கலாமா?. இந்த ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகள் மாறி, மாறி இரட்டை வேடம் போடுகிறது. இதனை இளைஞர்கள் வேடிக்கை பார்க்கக் கூடாது, தொடர்ந்து எழுச்சுடன் போராட வேண்டும். இவ்வாறு டி.ராஜேந்திரர் பேட்டியளித்துக்கொண்டிருந்த தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் போராட்ட களத்துக்கு வந்தார். அவருடன் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், துணை பொதுசெயலாளர் வி.பி.துரைசாமி, ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோரும் வந்திருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின் பேசினார். திரைப்பட நடிகர் மயில்சாமி, பாடல் ஆசிரியர் சினேகன், ஸ்டண்ட் நடிகர் ஜாக்குவார் தங்கம், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கலந்துக்கொண்டனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தி வருபவர்களுடன் சென்னை மாநகர இணை ஆணையர் மனோகரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்

மேலும் செய்திகள்