நீதிபதி மேற்பார்வையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி வழக்கு ஐகோர்ட்டில் 27-ந்தேதி விசாரணை

ரகசிய ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை 27-ந்தேதிக்கு தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-02-23 21:30 GMT
சென்னை, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றிபெற்றதை ரத்துசெய்து, ஓய்வுபெற்ற நீதிபதி மேற்பார்வையில் ரகசிய ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை 27-ந்தேதிக்கு தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதா படம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்டது.

அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களது வாகனங்களின் முகப்பில், சுப்ரீம் கோர்ட்டினால் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை வைத்துக்கொண்டு வலம் வருகின்றனர். முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்கும்போதும் ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டிருந்தது. இந்த செயல்கள் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொண்டால் நாளை அரசு அலுவலகங்களில் சசிகலாவின் புகைப்படத்தையும் வைத்துவிடுவார்கள்.

விடுதியில் எம்.எல்.ஏ.க்கள்

அ.தி.மு.க.வை சேர்ந்த 122 எம்.எல்.ஏ.க்களை சொகுசு விடுதியில் 10 நாட்களுக்கும் மேலாக சிறை கைதிகளைபோல அடைத்து வைத்திருந்தது மற்றொரு குற்றமாகும். எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு கோரியதால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது.

கர்நாடக சிறையில் உள்ள சசிகலாவிடம் இருந்து போன் அழைப்பு வந்த பிறகே, சபாநாயகர் சபையை ஒத்திவைத்தாரா? என்பதையும், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரது சட்டை கிழிந்தது குறித்தும் தடயவியல் நிபுணர்களை கொண்டு அறிவியல்பூர்வமாக விசாரணை நடத்த வேண்டும்.

நீதிபதி மேற்பார்வையில்...

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என்று தமிழக கவர்னர் அறிவித்து, அதை ரத்துசெய்ய வேண்டும். இதுதொடர்பாக நான் கொடுத்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க தமிழக கவர்னரின் செயலாளர், இந்திய தலைமை தேர்தல் ஆணையர், மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

சட்டசபையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், குற்றம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும். தண்டனை குற்றவாளியின் படத்தை வைத்து ஆட்சிபுரியும் ஆளுங்கட்சியின் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்யவேண்டும்.

இதன்பின்னர், சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது ஐகோர்ட்டு தலைமை நீதிபதியின் மேற்பார்வையில் நம்பிக்கை தீர்மானத்தின் மீது ரகசிய ஓட்டெடுப்பை மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

27-ந்தேதி விசாரணை

இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இதே கோரிக்கையுடன் ஏற்கனவே மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு திங்கட்கிழமை (27-ந்தேதி) விசாரணைக்கு வருவதால், அந்த வழக்குடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மேலும் செய்திகள்