நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் பற்றி நேர்மாறாக தகவல்களை பரப்புகின்றனர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

புதுக்கோட்டை நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் பற்றி நேர்மாறாக தகவல்களை பரப்புகின்றனர் என திருச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2017-02-25 22:15 GMT
திருச்சி

இயற்கை எரிவாயு திட்டம் 

திருச்சி பீமநகரை சேர்ந்த பா.ஜ.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் (வயது 55) உடல் நலக்குறைவால் நேற்று இறந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சிக்கு வந்து நாகராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

 அதன்பின் அவரிடம் நிருபர்கள், புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் பற்றிய அறிவிப்பு குறித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருவதையும் கூறி கருத்து கேட்டனர். அதற்கு பொன்.ராதா கிருஷ்ணன் பதில் அளித்து கூறியதாவது:–

ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க திட்டம் பற்றி ஆய்வுக்கான அறிவிப்பை எதிர்த்து வருகின்றனர். அந்த திட்டத்தை பற்றி முழுமையாக யாராவது படித்தது உண்டா? திட்டத்திற்கு நேர்மாறாக தகவல்களை பரப்புகின்றனர். தமிழகத்திற்கு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்க்கிறார்கள்.

அணுமின் நிலையம் 

கூடங்குளம் அணுமின் நிலையம் கொண்டு வரக்கூடாது என்றார்கள். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு மின்சாரம் கிடைக்காமல் போயிருந்தால் இன்றைய நிலைமை என்னவாகியிருக்கும். இதேபோல நெய்வேலி மின் திட்டம் இப்போது கொண்டு வந்திருந்தாலும் பாதிப்பு என எதிர்ப்பார்கள்.

அன்று காமராஜர் கொண்டு வந்ததால் இன்று மக்கள் கை தட்டி வரவேற்கின்றனர். எந்த திட்டம் வந்தாலும் எதிர்க்க வேண்டும் என சில இயக்கத்தினர் செயல்படுகின்றனர். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய திட்டங்களை கிடைக்கவிடாமல் எதிர்ப்பது தமிழ்நாட்டிற்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம்.

ஆய்வுக்கு பின்... 

நம்முடைய பகுதி விவசாயிகள் முன்னேற்றம், விவசாய முன்னேற்றம் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு நன்மையா? தீமையா என்பது பற்றி யோசிக்கட்டும். அதற்காக இந்த திட்டம் கொண்டு வந்தே தீர வேண்டும் என நான் சொல்லமாட்டேன். உரிய முறையில் ஆய்வுகள் நடத்தப்பட்டு மக்களுக்கு வேண்டாம் என்று சொன்னால் இந்த திட்டம் வேண்டாம். ஆனால் யாரோ சொன்னதற்காக தமிழகம் சீரழிந்து விடக்கூடாது.

சமூக வலைத்தளங்களில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பல தகவல்களை பரப்புகின்றனர். தவறான தகவல்களை யார் பரப்பினாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லையில் போலீஸ் வாகனத்தை வழிமறித்து கைதி கொலை செய்யப்படும் அளவிற்கு சட்டம்,ஒழுங்கு மோசமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்