வரலாறு திரும்பும் அதிமுக வரலாற்றை திருத்தி எழுதுவேன் தீபா சபதம்

வரலாறு திரும்பும் என ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை குறித்து கூறி தீபா சபதம்

Update: 2017-03-01 11:11 GMT


சென்னை

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரின் அண்ணன் மகள் தீபாவுக்கு அ.தி.மு.க.வில் ஒரு தரப்பினர் ஆதரவளித்தனர். அவர்கள், தீபாவை அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்று, ஜெயலலிதாவின் பிறந்த தினமாக பிப்ரவரி 24ல் 'எம்.ஜி.ஆர். அம்மா தீபா' பேரவையைத் தொடங்கியதோடு, கட்சிக் கொடியையும் அறிமுகப்படுத்தினார் தீபா. அதோடு, ஆர்.கே.நகரில் போட்டியிடுவதாகவும் அறிவித்தார். இதனால், தீபாவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

விரைவில் இந்த பேரவைக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட இருப்பதாக தீபா அறிவித்துள்ளார்.

இன்று தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில்

எம்ஜிஆர் மறைந்த போது ஜெயலலிதா எதிர்கொண்ட பிரச்சனைகளை விவரித்துள்ளார் தீபா. அதே ஜெயலலிதாதான் பின்னர் அதிமுகவின் வரலாற்றை திருத்தி எழுதினார் என பதிவிட்டுள்ளதுடன் "வரலாறு திரும்பும்" எனவும் குறிப்பிட்டிருக்கிறார். எம்ஜிஆர் மறைந்த போது ஜெயலலிதா அவமதிக்கப்பட்டார்; ஜெயலலிதா மறைந்த போது தாம் அவமதிக்கப்பட்டேன்; ஜெயலலிதா பின்னர் அதிமுக வரலாற்றை திருத்தி எழுதினார்; தாமும் அப்படி திருத்தி எழுதலாம் என்கிற அடிப்படையில் கூறி உள்ளார்.

காலை 9.00 மணி.

அடிக்கடி எம்.ஜி.ஆருடைய முகத்தையே உற்றுப் பார்ப்பதும்
பின்னர் எங்கேயோ தூரத்தில் வெறித்துப் பார்ப்பதுமாக இருந்த ஜெயலலிதா

அவ்வப்போது தன் கர்சீப்பால் முதல்வரின் முகத்தைச் சரிசெய்து கொண்டிருந்தார்.

யார் யாரோ வந்து ஜானகியின் சொந்தங்களைக் கட்டிப் பிடித்து ஆறுதல் சொன்னார்கள்.
யாரும் ஜெயலலிதாவைக் கண்டுகொள்ளவில்லை.

பொதுமக்கள் பார்வைக்காக எம்.ஜி.ஆரின் உடல் , மேடைக்கு கொண்டு வரப்பட்டது.

ஸ்டிரெச்சரிலிருந்த எம்.ஜி.ஆரின் தலைப் பகுதியை கையில் ஏந்தியபடியே அந்தச் சரிவான மேடைக்கு வந்த ஜெயலலிதா, கடைசி வரை ஸ்டிரெச்சரை ஒட்டியே நின்றுகொண்டிருந்தார். தூர்தர்ஷனின் நேரடி ஒளிபரப்பில் எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் முகம்தான் பளிச்சென்று தெரிந்தது.


மாலை 5.00 மணி.

ஜெயலலிதாவின் அருகிலிருந்த அந்த போலீஸ் அதிகாரி சொன்னார்.

‘மேடம் , காலையிலிருந்து நின்னுக்கிட்டே இருக்கீங்க...
கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க மேடம்! '.
ஜெயலலிதா அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

அசையாமல் அங்கேயே நின்று மாலையை சரிசெய்து கொண்டிருந்த ஜெயலலிதாவின் கையில் நகக்கீறல்கள்.
எம்.ஜி.ஆரின் தலைமாட்டில் நிற்கக் கூடாது என்று எதிர்ப்பாளர்கள் அரங்கேற்றிய தள்ளுமுள்ளுவால் கிடைத்தவை.

இரவு 11.00 மணி.

எம்.ஜி.ஆரின் உடலைப் பார்க்க ,
நான்கு நான்கு பேராக நின்று கொண்டிருந்த பொதுமக்களின் கியூ,
ராஜாஜி பவனில் ஆரம்பித்து சாந்தி தியேட்டர் வரை நீண்டு கொண்டே போனது.

நெருங்கிய கட்சிக்காரர்கள் நிறையப் பேர் ஓய்வெடுக்க வீட்டுக்குப் போயிருந்தார்கள்.
போயஸ் தோட்டத்துக்குத் தனது காரில் கிளம்பிய ஜெயலலிதா,
மறுநாள் அதிகாலை நான்கு மணிக்குத் திரும்பி வந்தார்.

மீண்டும் அதே தலைமாட்டுக்குப் பக்கமாக ஜெயலலிதாவுக்கு இடம் கிடைத்தது.
பிற்பகல் 12 மணி. எம்.ஜி.ஆரின் உடல் ராஜாஜி மண்டபத்தின் உட்புறம் வைதீக காரியங்களுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. டெல்லியிலிருந்து நிறையப் பேர் வந்திருந்தார்கள். ஒரு பக்கம் சடங்குகள் நடந்து கொண்டிருக்க , இன்னொரு பக்கம் கட்சிக்காரர்கள் கூடிக்கூடி பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேச்சு , மண்டபத்தில் இருந்து ஜெயலலிதாவை எப்படி வெளியேற்றுவது என்பதைப் பற்றியதாகத்தான் இருந்தது.

மதியம் 1 மணி.

ராணுவ டிரக்கில் எம்.ஜி.ஆரின் உடல் ஏற்றப்பட்டது.

எம்.ஜி.ஆரின் முகத்தை மறைத்த மாலையைச் சரி செய்ய ஜெயலலிதா டிரக்கில் ஏற , அடுத்த சலசலப்பு ஆரம்பமானது.
ராஜாஜி பவனில் உடலுக்குப் பக்கத்தில் நிற்கவே அனுமதிக்காதவர்கள்
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மாவா இருப்பார்கள்?

ஜெயலலிதா டிரக்கில் ஏற,
ஒரு ராணுவ அதிகாரி கை கொடுத்து உதவி செய்யவே ,
கோபமான ஜானகியின் சொந்தங்கள் ஜெயலலிதாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு
முந்திக்கொண்டு டிரக்கில் ஏறினார்கள்.

ஏறுவதற்குச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் நெற்றியில் கை வைத்து யாரோ தள்ளிவிட்டார்கள்.
டிரக்கின் பிடி நழுவி ஜெயலலிதா தள்ளாடினார்.
கீழே விழவிருந்த ஜெயலலிதாவை இன்னொரு ராணுவ அதிகாரி தாங்கிக் கொண்டார்.

ஜெயலலிதாவை வெளியேற்றுவதிலேயே மும்முரமாக இருந்தனர் அவருக்கு எதிரான ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள்.
தூர்தர்ஷனின் நேரடி ஒளிபரப்பு காமிரா எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டிருந்தது.

விரக்தியும் அவமானமும் உறுத்தவே , கூட்டத்தைவிட்டு விலகி தனியே நடக்க ஆரம்பித்தார் ஜெயலலிதா.
நிறைய சிந்தனையுடன் இருண்டு போன முகத்தோடு போயஸ் தோட்டத்துக்குத் திரும்பி வந்தவர்,
தன் அறைக் கதவை அடைத்துவிட்டு உள்ளே போனார்

ஜெயலலிதாவுக்கு எதிர்காலம் புதிராக இருந்தது.
கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை வெளிச்சமில்லை.
எம்.ஜி.ஆரை நம்பி அரசியலுக்கு வந்தவரை இப்போது தனிமை விடாமல் துரத்தியது.
எம்.ஜி.ஆரின் கடைசி உத்தரவு என்கிற பெயரில் சொல்லப்பட்ட விஷயங்கள் எல்லாம் ஜெயலலிதாவை சோர்ந்துபோக வைத்திருந்தன.
கட்சி சார்பாகக் கொடுக்கப்பட்டு இருந்த டெலிபோனும் பறிக்கப்பட்டிருந்தது.
எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதாவை சந்திக்கக் கூடாது என்கிற கண்டிப்பான உத்தரவு ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டு, கட்சிக்குள் அவரைக் கட்டம் கட்டி ஒதுக்கி வைத்திருந்தார்கள். இத்தனைக்கும் அவர், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர். அமைச்சர்கள் , எம்.எல்.ஏ.க்கள் என புடைசூழ வாழ்ந்தவர்.

மறுநாள் சனிக்கிழமை ,

ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் போயஸ் தோட்டத்தில் கூடினார்கள்.

இறுதி ஊர்வலத்தில் நடந்தது என்ன என்பதைப் பற்றி மீடியா கிசுகிசுத்தபோது ,
அந்தப் புனிதமான சூழ்நிலையை மாசுபடுத்தி சர்ச்சையாக்க விரும்பவில்லை ' என்று சொன்னார்.

ஆனால் , அறிக்கையின் கடைசிப் பகுதி அவருடைய அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இறுதி ஊர்வலத்தில் அமைச்சர்கள் எல்லாம் வசதியாகச் சென்றபோது,
அப்பாவித் தொண்டர்கள் இரண்டாந்தரமாக நடத்தப்பட்டார்கள்!

'ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை உண்மையில் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ,
தன்னை எளிதாக ஓரம் கட்டிவிடலாம் என்று நினைத்தவர்களின் வயிற்றில் உடனடியாகப் புளியைக் கரைத்தவர் ஜெயலலிதா.

இது முடிவல்ல ; ஆரம்பம்தான் என்பதை ஆணித்தரமாக உணர்த்தியதிலிருந்துதான் தொடங்குகிறது அவருடைய அரசியல் பயணம்.

 பட்ட அடிகளும் அவமானங்களும் கொஞ்சநஞ்சமல்ல.
 மீறி எழுந்துநின்று நினைத்ததை சொன்னதைச் செய்து காட்டினாரே ,
அது. ஆயிரம் குற்றச்சாட்டுகள்.
லட்சம் விமரிசனங்கள். கணக்கே இல்லாத கண்டனக் கணைகள்.
அதனாலென்ன ? எம்.ஜி.ஆருக்குப் பின் அ.தி.மு.க. என்னாகும் என்கிற கேள்வியைத் திருத்தி எழுதி ,
ஜெயலலிதாவுக்குப் பின் அ.தி.மு.க. என்னவாகும் என்று கேட்கச் செய்ததே அவரது வெற்றி .

சந்தேகமில்லை.
#வரலாறுதிரும்பும் #தீபா

மேலும் செய்திகள்