தினகரனின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என தேர்தல் அதிகாரியிடம் அதிமுக தொண்டர் மனு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டுள்ள டி.டி.வி.தினகரனின் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என்று தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம் அ.தி.மு.க தொண்டர் ஜோசப் மனு அளித்துள்ளார்.

Update: 2017-03-24 06:58 GMT
சென்னை

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். இதனிடையே, டி.டி.வி.தினகரனின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி அ.தி.மு.க தொண்டர் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும். சிறைத்தண்டனையாக இல்லாமல் அபராதம் செலுத்தி வருவதும் தண்டனையின் ஒருபகுதிதான். இதனால் அவரது வேட்புமனுவை ஏற்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மத்திய அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், மனுதாரர் மத்திய அரசை அணுகுமாறும் அறிவுரை வழங்கியது.

இந்தநிலையில், டி.டி.வி.தினகரனின் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என்று ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம் அ.தி.மு.க தொண்டர் ஜோசப் இன்று மனு அளித்துள்ளார். அதில், டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால், அவரது வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளவர்களின் மனு மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்