டாஸ்மாக் கடைகளில் வன்முறை சம்பவங்களால் ரூ.6 கோடி இழப்பு உயர் அதிகாரி தகவல்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நடந்த வன்முறை சம்பவங்களால் ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2017-05-18 22:00 GMT
சென்னை, 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நடந்த வன்முறை சம்பவங்களால் ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. போலீசார் வேடிக்கை பார்க்காமல் வரும் காலங்களில் இதுபோன்ற வன் முறையை தடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் உயர் அதிகாரி கூறினார்.

கோர்ட்டு உத்தரவு

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு, மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. புதிதாக திறக்கப்படும் கடைகளில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது.

குறிப்பாக தீ வைப்பு சம்பவம், கடைகள் சூறையாடுவது, மதுபாட்டில்கள் அழிப்பு, மதுக்கடை கட்டிடங்களை இடிப்பது போன்ற சம்பவங்களால், டாஸ்மாக் நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு எற்பட்டு வருகிறது.

இதுகுறித்து டாஸ்மாக் நிறுவன உயர் அதிகாரியிடம் கேட்டபோது அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

பொதுமக்கள் போராட்டம்

கேள்வி:- தமிழகத்தில் எவ்வளவு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன?

பதில்:- மொத்தம் 3 ஆயிரத்து 551 கடைகள் செயல்பட்டு வருகின்றன.

கேள்வி:- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறதா?

பதில்:- மாற்று இடங்களில் கடைகள் திறப்பது என்பது கோர்ட்டு உத்தரவை ஏற்று தான் நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேள்வி:- போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளதே?

பதில்:- அறவழியில் தான் போராட்டம் நடத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் போராட்டக்காரர்கள் கடை கட்டிடங்களை இடிப்பது, மதுபாட்டில்களை உடைப்பது, பணியாளர்களை தாக்குவது போன்று வன்முறையில் ஈடுபடுவதை ஏற்க முடியவில்லை.

ரூ.6 கோடி இழப்பு

கேள்வி:- வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகிறதே?

பதில்:- பெயரளவுக்கு வழக்குப்பதிவு மட்டும் செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நடந்த அசம்பாவித சம்பவத்திற்கு பிறகு போலீசார் அனைத்து வன்முறைகளையும் கைகட்டி வேடிக்கை தான் பார்க்கின்றனர். வரும் காலங்களில் இதுபோன்று இல்லாமல் வன்முறையை தடுக்க வேண்டும்.

கேள்வி:- டாஸ்மாக் கடைகள் முன்பு நடந்த வன்முறை சம்பவங்களால் எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது?

பதில்:- டாஸ்மாக் நிறுவனத்துக்கு சுமார் ரூ.6 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

கேள்வி:- இந்த இழப்பை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளுமா?

பதில்:- தற்போது வரை இந்த இழப்பை டாஸ்மாக் நிறுவனம் தான் ஏற்று வருகிறது.

கேள்வி:- கடந்த ஆண்டு டாஸ்மாக் நிறுவனத்துக்கு எவ்வளவு வருவாய் கிடைத்தது?

பதில்:- ரூ.25 ஆயிரத்து 530 கோடி வருவாய் கிடைத்தது.

மாற்றுப்பணி

கேள்வி:- மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய பணியாளர்களுக்கு மாற்று பணி வழங்கப்பட்டுள்ளதா?

பதில்:- மாற்று இடங்களில் திறக்கப்படும் கடைகளில் பணி வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில், டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப பணி நியமனம் செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. விரைவில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுவிலக்கு கொள்கையை பின்பற்றி, பொதுமக்களின் கருத்துக்கு ஏற்ப மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்கும் விஷயத்தில் அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். குறிப்பாக எத்தனை கடைகளை மூடுவது? புதிதாக கடைகளை இனி திறக்க வேண்டுமா? எவ்வளவு மணி நேரம் மது பாட்டில்கள் விற்பனை செய்வது? என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்