மருத்துவ மேற்படிப்புக்கான தகுதி பட்டியலை வெளியிட அவகாசம் தமிழக அரசின் மனு ஐகோர்ட்டு ஒத்திவைப்பு

மருத்துவ மேற்படிப்புக்கான புதிய தகுதிப்பட்டியலை வெளியிட காலஅவகாசம் கேட்டு தமிழக அரசு தொடர்ந்த மனுவின் விசாரணையை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.

Update: 2017-06-23 23:00 GMT
சென்னை,

எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு முடித்து, அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களாக பணியாற்றுபவர்கள் எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுகலை மருத்துவ படிப்பில் சேரும்போது, அவர்களுக்கு மாநில அரசு சலுகை மதிப்பெண் வழங்குவது வழக்கம்.

அதாவது, தொலைதூர கிராமங்களிலும், மலை கிராமங்களிலும் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், ‘நீட்‘ தேர்வில் பெற்ற மதிப்பெண்ணில் 10 முதல் 30 சதவீதம் சலுகை மதிப்பெண் வழங்கலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள் வழிவகை செய்கிறது.

அதேநேரம், தொலைதூர கிராமம், குக்கிராமம், மலைகிராமம் என்று வரையறை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்கண்ட கிராமங்களை வரையறை செய்து அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக கடந்த மே மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதை எதிர்த்து டாக்டர் பிரணிதா உள்பட பல டாக்டர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையில், அரசாணையின்படி, கலந்தாய்வு நடத்தி, முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் தகுதிப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. இந்த நிலையில், டாக்டர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘ஐகோர்ட்டு மதுரை கிளை அருகேயுள்ள உள்ள ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார மையத்தை, தொலைதூர கிராமம் என்று தமிழக அரசு வரையறை செய்துள்ளது.

இதுபோல, நகர் பகுதிக்கு மிக அருகில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை எல்லாம் தொலைதூர கிராமங்கள் என்று வரையறை செய்திருப்பதை ஏற்க முடியாது. அதனால், இதுதொடர்பான அரசாணையை ரத்து செய்கிறோம்.

புதிய அரசாணையை பிறப்பித்து, அதன் அடிப்படையில், முதுகலை மருத்துவ படிப்புக்கான தகுதிப் பட்டியலை 3 நாட்களுக்குள் வெளியிடவேண்டும். ஏற்கனவே, வெளியிடப்பட்ட தகுதிப் பட்டியலை ரத்து செய்கிறோம்’ என்று கூறியிருந்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மேலும், முதுகலை மருத்துவ படிப்புக்கான புதிய தகுதிப்பட்டியலை தயாரித்து வெளியிட 2 வாரம் காலஅவகாசம் வழங்கக் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதிகள் ராஜீவ் ஷக்தேர், சுரேஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி ஆஜராகி, ‘இந்த ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளோம். சுப்ரீம் கோர்ட்டுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே முதுகலை மருத்துவ படிப்புக்கான புதிய தகுதி பட்டியலை தயாரித்து வெளியிட 2 வார காலஅவகாசம் வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள். ‘முதுகலை மருத்துவ படிப்புக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து தான், 3 நாட்களில் தகுதி பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று அவகாசம் வழங்கியிருந்தோம். இப்போது மேலும் கால அவகாசம் வேண்டும் என்றால், சுப்ரீம் கோர்ட்டில் தான் முறையிட வேண்டும்’ என்று கூறினர்.

அதற்கு அட்வகேட் ஜெனரல், ‘சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை), முறையிட உள்ளோம். எனவே, இந்த மனு மீதான விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளிவைக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர். 

மேலும் செய்திகள்