உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் மாநில தேர்தல் ஆணையர் உள்பட 6 அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு
உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் மாநில தேர்தல் ஆணையர் உள்பட 6 அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு;
சென்னை,
ஐகோர்ட்டு உத்தரவிட்டபடி உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் உள்பட 6 அதிகாரிகள் மீது தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் அவர்கள் 4 வாரத்தில் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 கட்டங்களாக நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதே ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்தது.
இதற்கிடையே ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, மே மாதம் 14-ந் தேதிக்குள் கண்டிப்பாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், தற்போது வரை உள்ளாட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இந்தநிலையில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-
ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டபடி மே 14-ந் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
எனவே, ஐகோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாத முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் ராஜசேகர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் பனீந்திர ரெட்டி, பேரூராட்சிகளின் இயக்குனர் மகரபூஷனம், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த வழக்கு சம்பந்தமாக முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன் உள்ளிட்ட 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.