டி.டி.வி.தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ் ஆகியோரை தகுதி நீக்கம் வழக்கு தள்ளுபடி

டி.டி.வி.தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ் ஆகியோரை தகுதி நீக்கம் வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2017-12-14 22:45 GMT

சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிடுபவர் சத்தியமூர்த்தி.

இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம், பரிசுப் பொருட்களை அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வாரி இறைத்ததால், ஆர்.கே.நகர் தொகுதிக்காக இடைத்தேர்தல் ஏற்கனவே தள்ளிவைக்கப்பட்டது. மேலும், இந்த தொகுதியில் போட்டியிட்ட பிறகட்சி வேட்பாளர்களும் இதுபோல முறைகேட்டில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வருகிற 21–ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த முறை பணப்பட்டுவாடா தொடர்பாக 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 82 பேர் கைது செய்யப்பட்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். எனவே, கடந்த முறை தேர்தல் ரத்தாக காரணமாக இருந்த வேட்பாளர்கள் மதுசூதனன், மருதுகணேஷ் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. தகுதி நீக்கம் செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் ‘கடைசி நேரத்தில் மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்