ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

Update: 2018-02-22 21:45 GMT
சென்னை,

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. தொடர்ந்த வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. கொறடா சக்கரபாணி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது அரசு கொறடா உத்தரவை மீறி தற்போது துணை முதல்-அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தீர்மானத்துக்கு எதிராக ஓட்டுபோட்டனர்.

அதனால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் மனு அளித்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் முதல்-அமைச்சருக்கு எதிராக செயல்பட்ட டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல். ஏ.க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து, ஒருதலைபட்சமாக சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். எனவே ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க் களையும் தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ‘ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கேள்வியே அப்போது எழவில்லை. சபாநாயகரின் அதிகாரம் தொடர்பான இந்த வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை’ என்று வாதிட்டார்.

சட்டசபை செயலாளர் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், இந்த வழக்கில் சட்டசபை செயலாளர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தவில்லை. அதனால் செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை என்று வாதிட்டார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்