புதிய சட்டவிதிமுறைகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்

தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளை முறைப்படுத்தும் சட்டவிதிமுறைகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2018-03-22 23:45 GMT
சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது.

சட்டசபையில் தமிழ்நாடு தனியார் மருத்துவமனை நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) திருத்தச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. கவர்னரின் ஒப்புதலுடன் விரைவில் அதற்கான புதிய விதிமுறைகள் வெளியிடப்படும்.

ஒரு மருத்துவமனையில் என்ன வசதிகள் உள்ளன, எத்தனை டாக்டர்கள் உள்ளனர், எத்தனைபேர், எத்தனை படுக்கைகள் உள்ளன? என்பதுபோன்ற தகவல்களை அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து பதிவு செய்யவேண்டும்.
தரமான சிகிச்சை அளிக்கும் அடிப்படை வசதிகளை கண்டிப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்த சட்டம் வலியுறுத்தும்.

தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமல்லாமல் அரசு மருத்துவமனைகளுக்கும் இந்த சட்டம் பொருந்தும். சட்டசபையில் மாற்றுக் கருத்து கூறப்படாமலேயே இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

போலி டாக்டர்கள் அதிகம் உள்ளனர். இந்த சட்டப்படி, ஏற்கனவே உள்ள மருத்துவ மனைகளும், டாக்டர்களும் 9 மாதங்களுக்குள் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். புதிய மருத்துவமனைகள் 6 மாதத்துக்குள் பதிவு செய்யவேண்டும். இதன் மூலம் ஒரு மருத்துவமனையில் வசதி பற்றி தெரிந்துகொள்ள முடியும். போலி டாக்டர்களையும் 100 சதவீதம் ஒழித்துவிடலாம்.

அனைத்து தனியார், மருத்துவமனைகளை கட்டுப்படுத்தும் வகையில் விதிகள் வகுக்கப்படுகிறது. சாதாரண சிறிய மருத்துவமனை, கிளினிக், நர்சிங் ஹோம், சிறிய அறுவை சிகிச்சை அறை உள்ள மருத்துவமனை, சிறப்பு மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள், ஆயுஷ் மருத்துவமனைகள் என அனைத்து ஆஸ்பத்திரிகளுக்குமான விதிகள், சட்டத்துறையுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும்.

விதிகளை மீறும்பட்சத்தில், குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம், அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து தவறு செய்தால் உரிமம் ரத்தாகும்.

பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியல், ஜனவரி மாதந்தோறும் தமிழக அரசிதழில் வெளியிடப்படும். இதன் மூலம் போலி மருத்துவமனைகள், பதிவு பெறாத மருத்துவமனைகள் டாக்டர்கள், சிகிச்சை அளிக்கும் வாய்ப்புகள் முழுமையாக தடுக்கப்படும்.

மாநில அளவில் பொது சுகாதார இயக்குனருக்கும் (டி.எம்.எஸ்.), மாவட்ட அளவில் சுகாதாரத்துறை இணை இயக்குனருக்கும் ஆய்வு செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு உத்தரவிடவும், நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வசதிகள் இல்லாத மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் அளிக்காமல் மூட உத்தரவிடப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்