இன்றும் கடல் அலையின் சீற்றம் இருக்கும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்

கடல் அலையின் சீற்றம் இன்றும் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2018-04-23 23:00 GMT
சென்னை, 

தென் தமிழகத்தின் கடற் கரையை ஒட்டிய பகுதிகளில் குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் இயற்கை மாற்றம் காரணமாக 21-ந் தேதி காலை 8.30 மணி முதல் 22-ந் தேதி இரவு 11.30 மணி வரை 18 முதல் 22 வினாடிகள் இடைவெளியில் 2.5 மீட்டர் முதல் 3.5 மீட்டர்(8 முதல் 11 அடி) உயரத்திற்கு கடல் அலைகள் சீற்றத்துடன் எழும் என்று இந்திய கடல்சார் தகவல் மையம் தெரிவித்திருந்தது.

பின்னர், 22-ந் தேதி மாலை 5.30 மணி முதல் 23-ந் தேதி இரவு 11.30 மணி வரை, 17 முதல் 20 வினாடிகள் இடைவெளியில் 2.5 மீட்டர் முதல் 3 மீட்டர்(8 முதல் 10 அடி) உயரத்துக்கு கடல் அலைகள் சீற்றத்துடன் எழும் என்றும் கடல்சார் தகவல் மையம் தெரிவித்தது.

இதனை சுட்டிக் காட்டி உள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இந்திய கடல்சார் தகவல் மையம் அறிவித்துள்ளதன் அடிப்படையில் கடல் அலைகளின் சீற்றம் இன்று(செவ்வாய்க்கிழமை) தான் குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது. எனவே இன்றும் கடல் அலையின் சீற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மீனவர்கள் இன்றும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை என்றாலும், கடலுக்குள் 30 நாட்டிக்கல் தூரம் வரை சென்று மீன்பிடிக்கும் பைபர் படகுகள் மற்றும் கட்டுமர படகுகளுக்கு மீன்பிடிக்க அனுமதி உண்டு. எனவே அந்த படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர். 

மேலும் செய்திகள்