ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் தொடங்கிய புத்தாண்டு: 2026-ஐ உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்

புத்தாண்டையொட்டி சென்னை சாந்தோம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.;

Update:2026-01-01 00:00 IST

சென்னை,

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக தொடங்கி உள்ளது. முன்னதாக 2026ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட உலக மக்கள் தயாராகி வந்தநிலையில், நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளது. அந்த வகையில், தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக, சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை வரவேற்க தயாராக இருந்தனர். முன்னதாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை போலீசார் விதித்திருந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வகையில் மெரினா காமராஜர் சாலை, அண்ணாசாலை, வடபழனி, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல, பெண்களிடம் அத்துமீறல், சாலை விபத்து போன்ற விரும்பத்தகாத செயல்களை தவிர்க்க கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில், நேற்று மாலை 6 மணி முதலே சென்னையில் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, பரங்கிமலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர், கோயம்பேடு உள்ளிட்ட 12 போலீஸ் மாவட்டங்களில் 425 இடங்களில் சாலைகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் நடத்தப்பட்டது.

 

நகரின் முக்கிய இடங்களில் வாகன தணிக்கை செய்யப்பட்டு சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணைகளும் நடந்தது. இதுதவிர 30 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டனர். இதோடு 30 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 'பைக் ரேஸ்' நடத்தவிடாமல் தடுப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கண்காணிப்பு குழுக்கள் கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் ஜி.எஸ்.டி. ரோடு பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட முக்கியமான கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் இதர வழிபாட்டு இடங்களில் அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

நேற்று மாலை முதல் இன்று வரை பொதுமக்கள் கடலில் குளிக்கவோ, இறங்கி விளையாடவோ அனுமதி மறுக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை, திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் போலீசார் குதிரைப்படைகளில் ரோந்து சுற்றி வந்தனர். இதற்காக மணலில் எளிதாக செல்லக்கூடிய வாகனங்களும் பயன்படுத்தப்பட்டது.

காவல் உதவி மையங்களும் மேற்கண்ட கடற்கரை பகுதிகளில் அமைக்கப்படும். டிரோன் கேமராக்கள் மூலம் மேற்கண்ட கடற்கரை பகுதிகள் கண்காணிக்கப்பட்டது. ஆங்காங்கே மெட்ரோ ரெயில் பணிகள் நடப்பதால், பொதுமக்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் தடுக்க மாற்று வழி ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

கடற்கரை பகுதிகளில் கடலோர பாதுகாப்பு குழும வீரர்களும், நீச்சல் படையினரும் தயார் நிலையில் இருந்தனர். கடற்கரை பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டிருந்தது.

நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டையொட்டி நடைபெறும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. நட்சத்திர ஓட்டல்களின் நிர்வாகிகள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு இதுதொடர்பாக உரிய ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நட்சத்திர ஓட்டல் கொண்டாட்டங்களில் சிறப்பு பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

 

சென்னையில் மெரினா, பெசண்ட் நகர் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டதையொட்டி மாலை முதலே இந்த பகுதியில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. புத்தாண்டை வரவேற்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரே இடத்தில் திரண்டனர்.

இந்நிலையில் சரியாக 12 மணி ஆனதும் அனைவரும் ஒன்று சேர்ந்து 'ஹேப்பி நியூ இயர்' என்று உற்சாகமாக குரல் எழுப்பியபடியும், கைகளை குலுக்கியும் புத்தாண்டை வரவேற்றனர். வண்ண, வண்ண பலூன்களை பறக்கவிட்டனர். இதேபோல, விதவிதமான வகைகளில் கேக்குகளை கொண்டுவந்து அதை வெட்டி புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர், அருகில் இருந்தவர்களுக்கும் கேக்குகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். இதனால், மெரினா காமராஜர் சாலையில் உற்சாகம் கரைபுரண்டோடியது. இதேபோல, மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும் மெரினா காமராஜர் சாலையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

 

இதனிடையே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாக நடனமாடி புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம், சென்னை சாந்தோம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. 

சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இடையே லேசான சாரல் மழை பொழிந்து, மக்களின் கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டது.  சென்னை, திருச்சி, சேலம், கோவை, மதுரை, புதுச்சேரி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்