பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்கு இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.;
FILEPIC
சென்னை,
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் 2022-ம் ஆண்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை உள்பட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பும், கரும்பும் வழங்கப்பட்டது. கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் தலா ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் வழங்கப்பட்டது.
ஆனால், கடந்த பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டும் வழங்கப்பட்டு ரொக்கப் பரிசு வழங்கப்படாத நிலையில், அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால் பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்புடன் சேர்த்து கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே வழங்கப்பட்ட ரொக்கப்பணத்தைவிட கூடுதலாக ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
இந்தநிலையில், 2026 பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்கு இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.