தலைமை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

எஸ்.வி.சேகருக்கு அடைக்கலம் கொடுத்து அவரை பாதுகாக்கும் தலைமை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் பத்திரிகையாளர் தொடர்ந்த வழக்கு ஐகோர் ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Update: 2018-04-24 23:30 GMT
சென்னை, 

ஐகோர்ட்டில் பெண் பத்திரிகையாளர் கவின்மலர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி மாணவிகளை வற்புறுத்தியதாக பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் கூட்டத்தை தமிழக கவர்னர் கூட்டினார்.

அப்போது பெண் நிருபர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல், அந்த பெண் நிருபரின் கன்னத்தை கவர்னர் தட்டினார். அவரது இந்த செயலுக்கு, பல தரப்பில் இருந்தும் கண்டனம் வந்தது. இதையடுத்து கவர்னர், மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில், பெண் பத்திரிகையாளர்களை கேவலமாக, அவதூறாக சித்தரித்து, தன்னுடைய முகநூல் பக்கத்தில் பா.ஜ.க. நிர்வாகியும், நடிகருமான எஸ்.வி.சேகர் கட்டுரை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசாரும் அவர் மீது கிரிமினல் வழக்கை பதிவு செய்துள்ளனர்.

ஆனால், அவரை கைது செய்யவில்லை. எஸ்.வி.சேகரின் அண்ணன் மனைவி கிரிஜா வைத்தியநாதன், தமிழக அரசின் தலைமை செயலாளராக உள்ளார். உயர் பதவியில் இருக்கும் இவர், தன்னுடைய உறவினர் எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்யாத வண்ணம், அவருக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார். இது சட்டப்படி குற்றமாகும்.

எனவே, ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.வி.சேகரை, போலீஸ் பிடியில் சிக்காமல் அவருக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்து வரும் கிரிஜா வைத்தியநாதன் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.வி.சேகரை உடனடியாக கைது செய்ய, கிரிஜா வைத்தியநாதன் வீட்டில் சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது 

மேலும் செய்திகள்