அரபிக்கடலில் கோடை காலத்தில் உருவானது ‘சாகர்’ புயல் வானிலை மைய இயக்குனர் பேட்டி

அரபிக் கடலில் ஏடன் வளைகுடாவில் ‘சாகர்’ என்ற புயல் உருவாகி உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை)மழை பெய்யும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Update: 2018-05-17 22:53 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை பல மாவட்டங்களில் போதிய அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக கோடை காலத்தில் மழை பெய்யவேண்டும் என்று மக்களும் விவசாயிகளும் எதிர்பார்த்து உள்ளனர்.
இந்த நிலையில் சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது.

தென் மேற்கு அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் புயல் ஒன்று உருவாகி உள்ளது. அதற்கு சாகர் என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து புயலுக்கு பெயர் வைக்கப்படுகிறது. இந்த புயல் 50-வது புயல் ஆகும்.

இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த தாக்கமும் இல்லை. இந்த புயல் ஏமன் பகுதிக்கு கிழக்கில் 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது தென் மேற்கு திசையில் நகர்ந்து ஏமனை நோக்கி செல்கிறது. எனவே, மீனவர்கள் தென் மேற்கு அரபிக்கடலுக்கு அடுத்து 2 நாட்களுக்கு செல்லவேண்டாம்.

தமிழகத்தில் பெய்து வருவது கோடை மழையாகும். வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மழை பெய்யும். இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு.

பெருங்களூர், சாத்தூர் தலா 5 செ.மீ., தர்மபுரி, வாழப்பாடி, ஆண்டிப்பட்டி தலா 4 செ.மீ., ஊட்டி, கழுகுமலை 3 செ.மீ., பேச்சிப்பாறை, திருச்சுழி, சிவகாசி, வெம்பாவூர், கோவை, சத்திரப்பட்டி (திண்டுக்கல் மாவட்டம்) தலா 2 செ.மீ., முத்துப்பேட்டை, பழனி, சேரன்மகாதேவி, திருப்பத்தூர்(சிவங்கை மாவட்டம்), பாம்பன், பாலக்கோடு, அரண்மனைப்புதூர், தேவகோட்டை, சின்னக்கள்ளாறு, பீளமேடு, சேந்தமங்கலம், சேலம், வால்பாறை, காமாட்சிபுரம், கமுதி, பையூர் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

மேலும் செய்திகள்