ரஜினிகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-05-31 22:15 GMT
சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில், பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளின் மாமனார் கஸ்தூரி ராஜா என்னிடம் ரூ.65 லட்சம் கடன் வாங்கினார். அப்போது, இந்த கடன் தொகையை தான் திருப்பித் தரவில்லை என்றால், அந்த தொகையை தன்னுடைய சம்மந்தி ரஜினிகாந்த் தருவார் என்று உத்தரவாதம் அளித்தார். சொன்னபடி, கஸ்தூரிராஜா கடனை திருப்பித் தரவில்லை. எனவே, கஸ்தூரிராஜா மீது நடிகர் ரஜினிகாந்த் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் முகுந்த்சந்த் போத்ரா வழக்கு தொடர்ந்துள்ளார் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் மீது சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில், கிரிமினல் அவதூறு வழக்கை போத்ரா தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு, ஜூன் 6-ந்தேதி நேரில் ஆஜராக நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார். அதில், கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் தனக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர முடியாது என்றும் அந்த வழக்கை ரத்து செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வருகிற 5-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் செய்திகள்