தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசின் நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2018-06-07 21:30 GMT
சென்னை, 

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சர்க்கரை ஆலைகளின் நிதி ஆதாரங்களை மேம்படுத்தும் வகையிலான சில நடவடிக்கைகளுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கருப்பை மொத்தமாக இருப்பு வைப்பது, இந்த நடவடிக்கையில் ஒன்று.

இது கரும்புக்கு கட்டுப்படியான, நியாயமான விலை தொடர்பான தெளிவான அறிவிப்பில்லாத சர்க்கரை ஆலைகளுக்கு மட்டுமே பயன்தரும்.

இங்கு தனியார் சர்க்கரை ஆலைகள் அதிகமாக இயங்குகின்றன. அவை கட்டுப்படியாகும் நியாயமான விலையை கடன் மூலமாக விவசாயிகளுக்கு அளிக்கின்றன. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை நிறுவனங்கள் உயர்ந்த வட்டி விகிதத்தில் மாநில அரசிடம் இருந்து கடன்களை பெற்று நிலுவைத் தொகைகளை வழங்குகின்றன.

இந்த சூழ்நிலையில் சிரமத்துடன் நடத்தப்படும் ஆலைகளுக்கு மொத்தமாக இருப்பு வைத்தாலும் எந்தப் பயனும் கிடைக்காது. சந்தையில் சர்க்கரை கிலோவுக்கு ரூ.29 என்ற குறைந்தபட்ச விலையும் பயனளிக்காது. இந்த நடவடிக்கையெல்லாம், போதுமான நிதியை சர்க்கரை ஆலைகள் திரும்பப் பெறுவதை உறுதிப்படுத்தாது.

தமிழகத்தில் கரும்பு உற்பத்தியானது குறைவாக உள்ளது. எனவே இப்போது குறிப்பிட்ட அளவில் கரும்பை இருப்பு வைப்பதால் சர்க்கரை ஆலைகளின் நிதிநிலைமை மேலும் மோசமாகிவிடும்.

சர்க்கரை ஆலைகளில் கடந்த 2013-14-ம் நிதியாண்டில் இருந்து மாநில ஆதரவு விலையாக ரூ.1,510.46 கோடி நிலுவையாக உள்ளது. எனவே எத்தனால் தயாரிப்புக்கான நிதியுதவி வழங்கும் திட்டங்களால் தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு உடனடியாக எந்த நிவாரணத்தையும் அளித்துவிடாது.

இங்குள்ள சர்க்கரை ஆலைகள் மிகுந்த நிதிச் சுமையுடன் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையால், லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுகின்றன.

எனவே, தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு சில சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சர்க்கரையின் ஓராண்டு தேவை 15 லட்சம் மெட்ரிக் டன். ஆனால் உற்பத்தி 5.8 லட்சம் மெட்ரிக் டன்தான்.

இதன்படி, கரும்பு இருப்பு வைப்பதற்கான உச்சவரம்பில் தமிழகத்துக்கு விலக்கு அளித்திட வேண்டும்.

கரும்பு உற்பத்தியில் 14.16 சதவீதம் என்பது குறைந்தபட்ச ஏற்றுமதி ஒதுக்கீட்டு குறியீடாகும். கரும்பு உபரியாக உள்ள மாநிலங்களுக்கு இந்த அளவு 5.82 சதவீதமாகவே உள்ளது.

ஆனால் கரும்பு தட்டுப்பாடு காரணமாக, இந்த இலக்கை ஆலைகள் எட்டமுடியாது. ஏற்றுமதி செய்யப்படும் சர்க்கரையைக்கூட, இழப்பைச் சந்தித்து வரும் ஆலைகள் கிலோவுக்கு ரூ.19 என்ற விலையில்தான் கொடுக்க வேண்டியதாக உள்ளது. எனவே இதிலும் மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும்.

2017-18-ம் பருவத்தில் கரும்புக்கான கட்டுப்படியாகும் நியாயமான விலையை வழங்க வட்டி மானியத்தில் கடன் அளிக்க பரிந்துரை செய்ய வேண்டும். எத்தனால் சப்ளை மற்றும் குறைந்தபட்ச ஏற்றுமதிக்கான குறியீடு ஆகியவற்றைக் கருதாமல், முன்பு அறிவித்தபடி ஒரு குவிண்டால் கரும்புக்கு ரூ.5.5 உற்பத்தி மானியம் வழங்கும் திட்டத்தை அனைத்து விவசாயிகள் மற்றும் கரும்பு ஆலைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்.

மத்திய அரசின் நடவடிக்கைகளை நிறைவேற்ற முடியாததால் அவற்றில் இருந்து தமிழக ஆலைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்