கக்கன் பிறந்தநாள் விழாவில் 20 பேர் மட்டுமே பங்கேற்பு நேர்மைக்கும், எளிமைக்கும் ஆதாரமாக திகழ்ந்தவருக்கு கிடைத்த பரிசு

சத்தியமூரத்தி பவனில் நடந்த கக்கன் பிறந்தநாள் விழாவில் 20-க்கும் குறைவான தொண்டர்கள் பங்கேற்று, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Update: 2018-06-18 22:00 GMT
சென்னை,

சத்தியமூர்த்தி பவனில் நடந்த கக்கன் பிறந்தநாள் விழாவில் 20-க்கும் குறைவான தொண்டர்கள் பங்கேற்று, மலர் தூவி மரியாதை செலுத்தினர். நேர்மைக்கும், எளிமைக்கும் ஆதாரமாக திகழ்ந்த கக்கன் பிறந்தநாள் விழாவில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காமராஜர் ஆட்சிக்காலத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர் கக்கன். காமராஜரை போல் அரசியலில் மிக நேர்மையாகவும், எளிமையாகவும் இருந்து அரசியல் களத்தில் பயணித்தவர். அவரது 109-வது பிறந்தநாள் விழா சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. அவரின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

காலை 10.30 மணிக்கு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 11.30 மணியாகியும் மூத்த தலைவர் குமரி அனந்தன், கக்கன் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் அங்கு வரவில்லை. 11.30 மணிக்கு பிறகு ஓரிரு நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர்.

அதனை தொடர்ந்து 11.35 மணிக்கு கக்கன் படத்திற்கு மூத்த தலைவர் குமரி அனந்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், கக்கனின் பேரன் பி.வி.தமிழ்செல்வன், செல்வபெருந்தகை, செயற்குழு உறுப்பினர் ஜி.தமிழ்செல்வன், மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி உள்பட 20-க்கும் உட்பட்டவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த குமரி அனந்தன், ‘தமிழகத்தில் விரைவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

நேர்மைக்கும் எளிமைக்கும், ஆதாரமாக திகழ்ந்த கக்கனின் பிறந்தநாள் விழாவில் 20-க்கும் குறைவான தொண்டர்களே கலந்து கொண்டது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது, கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் நேர்மைக்கு கிடைத்த பரிசு இதுதானா? என்ற ஆதங்கத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்தியது.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து த.மா.கா. என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கிய ஜி.கே.வாசன் கட்சி அலுவலகத்திலும் நடந்த கக்கன் பிறந்தநாள் விழாவில் 10-க்கும் குறைவான நிர்வாகிகளே கலந்து கொண்டனர். த.மா.கா. அலுவலகத்தில் கக்கன் படத்திற்கு மூத்த துணைத்தலைவர் ஞானதேசிகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகள்