தூத்துக்குடி புனரமைப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் நிறுவனம் ரூ.620 கோடி வழங்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு

தூத்துக்குடி புனரமைப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் நிறுவனம் ரூ.620 கோடி வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2018-06-19 23:30 GMT
மதுரை, 

சிவகங்கை மாவட்டம் லாடனேந்தல் பகுதியை சேர்ந்த வக்கீல் விஜய்நிவாஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் அமைதியாக போராட்டம் நடத்தினார்கள். கடந்த மாதம் 22-ந்தேதி நடந்த போராட்டத்தின்போது போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 150-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையால் 25 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு காற்று, நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்துள்ளது. இதனால் அங்குள்ள ஏராளமான கிராமங்களில் மக்களுக்கு புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ரூ.10 கோடி இழப்பீடு

துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 கோடியை இழப்பீடாக வேதாந்தா நிறுவனம் வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைக்கும் பணிகளுக்காக அந்த நிறுவனம் சார்பில் ரூ.620 கோடியை தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்தவேண்டும்.

அந்த நிதி மூலம் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளான மீளவிட்டான், குமரரெட்டியாபுரம், மடத்தூர், கோரம்பள்ளம், புதுக்கோட்டை மற்றும் மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 

மேலும் செய்திகள்