கருணாநிதியின் இறுதிச்சடங்கை நிறுத்த உத்தரவிட முடியாது -சுப்ரீம் கோர்ட்

டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனுவுக்கு எதிராக கருணாநிதியின் இறுதிசடங்கை நிறுத்த உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

Update: 2018-08-08 09:37 GMT
புதுடெல்லி

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 95.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என அக்கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  இதுபற்றிய திமுகவின் மனு மீது நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்றது.

இந்த மனு மீது பதிலளிக்கும்படி இன்று காலை 8 மணிக்கு தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தி.மு.க. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் தொடங்கியது. இரு தரப்பினரும் அனல் பறக்கும் வாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பு வாதமும் நிறைவடைந்ததும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், சுந்தர் அமர்வு தீர்ப்பு  வழங்கியது.

இதை தொடர்ந்து சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யப்போவது இல்லை என முடிவு எடுத்து கோர்ட்டில் அறிவித்தது.

ஆனால்  டிராபிக் ராமசாமி  சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய உத்தரவிட்டதற்கு எதிராக மேல்முறையீடு  செய்யப்பட்டது.

மெரினாவில் அடக்கம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரிய கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. மேலும் கருணாநிதியின் இறுதி சடங்கை நிறுத்த முடியாது என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.

மேலும் செய்திகள்