சமாதிகளை அகற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் டிராபிக் ராமசாமி பேட்டி

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று டிராபிக் ராமசாமி கூறினார்.

Update: 2018-08-10 21:51 GMT
கோவை,

கோவை வந்த டிராபிக் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. அது பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடம். அங்கு சமாதிகளை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து உள்ளனர். எனவே அங்கு இருக்கும் சமாதிகளை அகற்றக்கோரி கடந்த ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்ததும், அவரை மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் அடக்கம் செய்ய இடம் கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை அவசர வழக்காக எடுத்து மறுநாளே தீர்ப்பும் வழங்கப்பட்டது.

நான் ஏற்கனவே தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறக்கோரி தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் என்னையும், எனது வக்கீலையும் மிரட்டினார்கள். ஆனாலும் நாங்கள் வழக்கை வாபஸ் பெறவில்லை. இருந்தபோதிலும் கோர்ட்டு நான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

அதற்கான நகல் எனக்கு கிடைத்ததும், தற்போது மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் சமாதிகளை அகற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். இதற்காக எனக்கு எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் பயப்படமாட்டேன். அங்கு இருக்கும் சமாதிகளை அகற்றும்வரை நான் ஓயமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்