கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கமல்ஹாசன் 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கமல்ஹாசன் 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். #KeralaFloods2018

Update: 2018-08-12 05:33 GMT
சென்னை,

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, பாலக்காடு, கோட்டயம், ஆலப்புழை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த மாவட்டங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாநிலத்தின் 24 அணைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.

இதனால் அணைகளையொட்டிய தாழ்வான பகுதிகள் மற்றும் ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்டதாலும், சாலைகளை வெள்ளம் அடித்துச் சென்றதாலும் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

மழை வெள்ளம் காரணமாக கடந்த 3 நாட்களாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.

மழையினால் வீடு, வாசல்களை இழந்த 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ள 439 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மழை, வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. 25 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரள அரசுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநில அரசுகளும் நிவாரண உதவி தொகையை வழங்கி உள்ளன. 

இந்தநிலையில்,  கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில்,  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்