மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 75 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 85 ஆயிரம் கனஅடியில் இருந்து 75 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

Update: 2018-08-22 03:18 GMT
மேட்டூர்,

கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது.

கர்நாடகாவின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து அணைகள் நிரம்பிய நிலையில் தண்ணீர் அதிக அளவில் திறந்த விடப்பட்டது.  இதனால் கடந்த மாதம் 23-ந் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.  கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை முதன்முறையாக நிரம்பியது.

இதன்பின்னர் கடந்த 13-ந் தேதி மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது.

இதனிடையே நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதே அளவு தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இதனால் மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 119.25 அடியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்தது.  இதனால் இந்த ஆண்டில் 3வது முறையாக அணை நிரம்பியுள்ளது.

மேட்டூர் அணையில் நீர்மட்டம் இன்று 120.21 அடியாக உள்ளது.  அணையில் நீர்இருப்பு 93.80 டி.எம்.சி.யாக உள்ளது.

இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது.

இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியில் இருந்து 70 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.  இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 85 ஆயிரம் கனஅடியில் இருந்து 75 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

இதேபோன்று மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 85 ஆயிரம் கனஅடியில் இருந்து 75,800 கனஅடியாக குறைந்து உள்ளது.

மேலும் செய்திகள்