ஆலந்தூர், பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையங்களில் சூரிய ஒளி திட்டம் ஆண்டுக்கு ரூ.69 லட்சம் சேமிக்க முடியும்

கோயம்பேடு மெட்ரோ ரெயில் பணிமனை, ஆலந்தூர், பரங்கிமலை ரெயில் நிலையங்களில் சூரிய சக்தி மின்தகடுகள் (சூரிய ஒளி மின்திட்டம்) அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.69 லட்சம் சேமிக்கப்படுகிறது.

Update: 2018-11-27 21:45 GMT
சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர்- சின்னமலை-விமானநிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்-சென்டிரல், சைதாப்பேட்டை- ஏ.ஜி-டி.எம்.எஸ் வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் பயணிகள் போக்குவரத்து சேவை நடந்து வருகிறது.

பயணிகளின் வரவேற்பை பொறுத்து சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் திருமங்கலம், அண்ணா நகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர் ஆகிய 4 சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்விளக்குகள், ஏசி, ரெயில் இயக்கம் ஆகியவற்றின் மின் தேவைக்காக 103 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான மின்தகடுகள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.6.3 லட்சம் மின்சார செலவு குறைகிறது.

தொடர்ந்து உயர் மட்ட பாதையில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையிலான மின்தகடுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்தவகையில் ஆலந்தூர், பரங்கிமலை மற்றும் கோயம்பேடு மெட்ரோ ரெயில் பணிமனையில் கூடுதலாக சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக 1,120 கிலோ வாட் சக்தி கொண்ட மின் தகடுகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 51 ஆயிரத்து 200 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று திட்டமிடப்பட்டு உள்ளது.

இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.69 லட்சத்து 49 ஆயிரத்து 152 சேமிக்க முடியும். இதனுடன் சேர்த்து சென்னை மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகம், பணிமனை மற்றும் ரெயில் நிலையங்களில் 3 மெகாவாட் அளவில் சூரிய மின்சக்தி மின்தகடுகள் அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் 4.6 மெகாவாட் அளவில் சூரிய மின்சக்தி மின்தகடுகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அவையும் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.

மேற்கண்ட தகவலை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்