தெலுங்கானாவில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை தேர்தல் பணிக்கு சென்று சென்னை திரும்பிய ஊர்க்காவல் படையினர் போராட்டம்

தெலுங்கானாவுக்கு தேர்தல் பணிக்கு சென்ற தங்களுக்கு அடிப்படை வசதி செய்து தரவில்லை என்று சென்னை திரும்பிய ஊர்க்காவல் படையினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2018-12-08 21:45 GMT
சென்னை,

சென்னை போலீஸ் துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஊர்க்காவல் படையினர் பணியாற்றுகிறார்கள். பிற வேலைகளில் ஈடுபட்டு வரும் இவர்கள் பேரிடர், கலவரம், தேர்தல் போன்ற சமயங்களில் போலீசார் போன்று காக்கிச்சீருடை அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

அதன்படி தெலுங்கானா மாநில தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் சென்றிருந்தனர். அங்கு பணி முடிந்து நேற்று அனைவரும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்துக்கு வந்து சேர்ந்தனர்.

திடீர் போராட்டம்

இந்தநிலையில் அவர்கள் திடீரென்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்துக்கு வெளியே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக ஊர்க்காவல் படையை சேர்ந்த சிலர் கூறும்போது, “தெலுங்கானா மாநிலத்தில் எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. நல்ல சாப்பாடு, தங்குமிடம் இல்லாமல் 5 நாட்களும் கொசு மற்றும் பூச்சிக்கடியில் தவித்தோம். தெலுங்கானாவில் உள்ள ஊர்க்காவல் படையினருக்கு பணி நிரந்தரம், மாதம் ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு பணி நிரந்தரம் இல்லை. வாரந்தோறும் ரூ.2,100 தான் சம்பளமாக வழங்கப்படுகிறது. எனவே எங்களுக்கும் தெலுங்கானாவை போன்று மாத ஊதியம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு

இதுகுறித்து தகவலறிந்து ஊர்க்காவல் படையை சேர்ந்த அதிகாரி மஜித் சிங், எழும்பூர் போலீஸ் உதவி கமிஷனர் சுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊர்க்காவல் படையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர். ஊர்க்காவல் படையினர் போராட்டம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்