சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் மீது புகார்; நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும்: டி.ஜி.பி. அலுவலகம்

சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி பொன். மாணிக்கவேல் மீதான புகார் பற்றி நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும் என டி.ஜி.பி. அலுவலகம் தெரிவித்துள்ளது.

Update: 2018-12-18 13:43 GMT
சென்னை,

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கடந்த மாதம் (நவம்பர்) 30–ந்தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஓய்வுபெற இருந்த நிலையில், ஐகோர்ட்டு புதிய உத்தரவை பிறப்பித்தது. அதாவது சி.பி.ஐ.க்கு வழக்குகளை மாற்றும் தமிழக அரசின் அரசாணையை சட்டவிரோதம் என்று கூறி ரத்து செய்ததோடு, ஓய்வுபெறும் பொன் மாணிக்கவேலை ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது.

இதற்கு தடை கோரி தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அவரது பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது என உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி பொன். மாணிக்கவேல் மீது அந்த பிரிவில் பணியாற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உள்பட 12 காவல் அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதில், சிலை கடத்தல் வழக்கில் உரிய ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் இல்லாமல் வழக்கு பதிவு செய்ய வற்புறுத்தப்படுகிறது.

இந்த வற்புறுத்தலை மீறும் அதிகாரிகளை சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் திட்டியும், மிரட்டியும் வருகிறார் என அவர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.  இதனால் இந்த பிரிவில் இருந்து அவர்கள் பணிமாறுதல் கேட்டு உள்ளனர்.

இதுபற்றி நடவடிக்கை எடுக்க பரிசீலனை மேற்கொள்ளப்படும் என டி.ஜி.பி. அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்